இருட்டில் சட்டென விளக்கு போடும் போது கண்ணில் ஏற்படும் வலி தான் என் இதயத்தில் தோன்றியது... யுவன்... எதேச்சையாய் நிகழ்ந்தது எங்கள் சந்திப்பு. எனக்கு தெரிந்த ஒருவரின் வீட்டில் விருந்தினராய் நான் செல்ல, அங்கே ஒரு அழகிய விருந்தினராய் இவன், யுவன் .
சின்னஞ்சிறு கைகள்... துரு துரு பேச்சு... அழகானவை அவன் கண்கள்... மிக அழகானவை... ஏனோ விடயலும் இரவும் அவனுக்கு ஒன்றாகவே தெரிவதாய் அம்மாவிடம் புலம்புகிறான். வாசனை பிடிக்கிறான்... சமையலைறையில் அறுபடும் காய்கறிகளும், அடுப்பில் கொதிக்கும் உலையும் அவனுக்கு அத்துபடி. தேங்காய் எண்ணை வாடை சற்று அதிகமாய் இருந்தால் அது பாட்டி, பாண்ட்ஸ் பௌடர் வாசம் சித்தி. அம்மாவிடம் வாசம் வேண்டாமாம், பக்கத்தில் இருந்தாலே தெரிகிறதாம் அம்மா என்று. அது தான் அன்பு வாசமோ??
பிறந்தது முதல் ஏனென்று தெரியாத காரணங்களால் அவன் வெளிச்சம் பறிக்கபட்டதாம். திரும்ப பெற முடியாத வெளிச்சம் கண்ணுக்கு நிரந்தரமாய் போடப்பட்ட கண்மையாய். இவ்வுலகத்தில் மனிதனை விட கொடுமையான கருணை இல்லாத ஒரு மிருகம் வேறு யாருமில்லை. அதை உறுதி செய்யும் விதத்தில் அவனுக்கு 2 வயது இருக்கும் போது விஷம் கொடுத்திருக்கிறார் அவன் அப்பா. வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் போது கழட்டி வைக்கும் செருப்பை போல அவனை வாழ்க்கையில் இருந்து கழட்டி வைக்க எண்ணியிருக்கிறார் போல. உலகத்தில் இப்படி கூட மனிதர்கள் இருக்க முடியுமா என்ன? வாழ்க்கை போர் புரிந்து திரும்பி இருக்கிறான் யுவன்... அவன் அம்மாவின் பாசம் தந்த தைரியமும் அவனுக்குள் அவன் ஏற்படுத்தி கொண்ட தன்னம்பிக்கையாலும்.
அவனை பார்த்த அன்று எனக்கு இரவு தூக்கம் இல்லை. பல வித யோசனைகள். அவன் நெஞ்சில் இருக்கும் வெளிச்சம் எனக்கு குன்றியுள்ளதோ? இருட்டுக்குள் காலடி எடுத்து கொண்டே போகிறேனோ? இந்த வருடம் நான் பலது கற்றேன்; பல ஏற்றங்கள், பல அடிகள்; இன்று இதையும் கற்கிறேன்.. இருட்டுக்குள் இருக்காதே... வெளியே வா. உலகம் மிக பெரியது... பல கண்கள் இருட்டில் வழி தேடுகிறது. அவர்களுக்கு வெளிச்சமாய் நானும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.
யுவன், என் கண்களுக்கு வெளிச்சம் காண்பித்தவன். நான் பல நாட்கள் கடந்து எழுதும் இந்த கட்டுரைக்கு ஊன்றுகோலானவன். அவனை நான் மறக்காமல் இருக்க எனை உந்திய சிறு விடிவெள்ளி.
யுவன், ஸ்கூலில் சேரும் குஷியில் இருக்கிறான். புது வீடு, புது ஊர். தனக்குள் இருக்கும் இருட்டிற்கு ஒரு சின்ன விடியல் வர போகும் ஆனந்தம். அந்த விடியல் அவனுக்கே அவனுக்கானது... நாமெல்லாம் அந்த விடியலுக்கு குருடர்கள்...
எண்ணங்களை தொடர்வேன்...

எண்ணங்களை தொடர வாழ்த்துக்கள். சந்தேகமில்லாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் குருடர்களாகவே இருக்கின்றோம்.
ReplyDeleteபதிவுலக பயணம் தொடரட்டும்.
Please remove the word verification from the comments section of your blogger settings.
ReplyDelete