தூரத்தில் இருக்கும் வெளிச்சத்தை தேடி - 6

"இல்லை.. என்னால இதை கண்டிப்பா ஒத்துக்க முடியாது" இஸ்க்கான் கோயில் வாசலில் திவ்யா அமர்ந்தபடி தன் எதிர்ப்பை தெரிவித்தாள்.
"லுக் திவ்யா... இதை நிச்சயமா பிரகாஷ் வந்து உன் கிட்ட பேசி இருக்கமாட்டார். அவர் அவ்ளோ நல்லவர். எனக்கு அது நல்லா தெரியும். ஆனா அவர் மனசிலே நீ மெல்ல நுழைஞ்சிட்டே திவ்யா.  என்னால அதை பிரகாஷ் கண்ணிலே பாக்க முடியுது. உன்னால தான் தொலஞ்சு போன பிரகாஷ் வாழ்கையை திருப்பி தர முடியும்."
"இல்லை நிஷாந்த். நான் பிரகாஷ் மனசிலே இடம் பிடிச்சிட்டேன்னு என்னால ஒத்துக்க முடியாது. என்னை பாக்கும் போதெல்லாம் பிரகாஷ்க்கு திவ்யா ஞாபகம் தான் வருது. என்னால எப்படி நிஷாந்த் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ முடியும். என்னால நானா எப்படி அவன் மனசிலே இடம் பிடிக்க முடியும்? எதுலேயும் திவ்யா தான் அவன் கண்ணுக்கு தெரியறாங்க. திவ்யாவோட ஒரு குரலா தான் என்னை பிரகாஷ் பாப்பான் நிஷாந்த்... பிரகாஷ் திவ்யாவை மறக்க ஒரு வாய்ப்பே இல்லாம போய்டும். இது வேண்டாம் நிஷாந்த் ப்ளீஸ்.."
"உனக்கு பிரகாஷ பிடிக்கலையா திவ்யா?"
"....."
"உன்னால இல்லைன்னு சொல்ல முடியாது. எனக்கு தெரியும். யோசிச்சு பாரு திவ்யா... அடுத்த வாரம் நானும் பிரகாஷும் லண்டன் கிளம்பறோம். அதுக்குள்ளே யோசிச்சுக்கோ. பாய்" நிஷாந்த் அங்கிருந்து படி இறங்கி கிளம்பிவிட்டான்.

இஸ்க்கான் படிகள் எப்போதும் ஒரு சில்லிப்பை தரும் உணர்வை திவ்யா உணர்ந்திருக்கிறாள். ஆனால் இன்று அந்த உணர்வு இல்லை. கடந்து போகும் மக்கள் கூட்டமோ, கரு மேகம் சூழும் வானமோ திவ்யாவிற்கு இன்று ஒரு பொருட்டாக படவில்லை. மெல்லிய மழை துளிகள் அவள் மேல் பட்டு அவளை தட்டி எழுப்ப எத்தனித்து கொண்டிருந்தது. திவ்யாவின் எண்ண ஓட்டம் படிகளை கடந்து சாலைகளை கடந்து ப்ராகஷின் இதயம் தேடியது. கண்கள் மட்டும் படிகளின் வழைவுகளில் கூட திரும்பாமல் இம்சித்தது. 
பிராகாஷ், காலேஜில் படித்த வரை ஒரு நல்ல நண்பன், தன் இயல்பான பேச்சுகளால் திவ்யாவை ஈர்த்தவன்... ஈர்ப்பவன். ஒரு சில சமயம் அவன் காதலை பார்த்து அந்த திவ்யா தானாக இருக்க கூடாதா என்று எண்ணியதுண்டு. அதை நினைத்து வெட்கப்பட்டதும் உண்டு, கோபப்பட்டதும் உண்டு. தனக்கு பொறாமை வர கூடாது என்று எத்தனையோ நாள் தன்னை கட்டுபடுத்தி கொண்டுள்ளாள்... ஆனால் இது கடவுளாக கொடுத்த ஒரு வாய்ப்போ என்று எண்ணுகையில் உள்ளே, ஒரு ஓரத்தில் தன் மனம் மகிழ்ச்சி அடைவதை கண்டு பிரமித்து தான் போனாள். ஆனால் அடுத்த வினாடி ப்ராகஷின் வாழ்க்கை தன்னால் பெரிதாக மாறாது என்று தோன்றியது... தன்னால் அவன் எப்போதும் திவ்யாவை மட்டுமே நினைத்திருப்பான் என்றும் தோன்றியது. இது சரிபடாது. பிரகாஷிற்கு தான் ஒரு நல்ல துணையாக இருக்க முடியாது என்று முடிவெடுத்தாள். மழை பெரிதாக பெய்ய தொடங்க, விழித்தெழுந்து அங்கிருந்து புறப்பட்டாள்.


அன்று பிரகாஷும் நிஷாந்தும் லண்டன் புறப்பட தயாராயினர். அவர்களுடன் காரில் போகும் போது கூட திவ்யாவின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. பிராகாஷ் இயல்பாக இருக்க முயற்சிக்கிறான் என்று தெள்ள தெளிவாக தெரிந்தது. காரில் இருந்த அமைதி எல்லோரையும் சங்கடத்தில் ஆழ்த்தியது. இது சரியல்ல என்று தோன்றவே, திவ்யா இயல்பாக பேச முற்பட்டாள்..


"அங்கே ரெண்டு பேரும் ஒண்ணா ஸ்டே பண்ண போறீங்களா"
நிஷாந்த்  அவளை பார்த்த பார்வை அவளை கொஞ்சம் பயமுறுத்தியது.
"ஆமா திவ்யா.. நிஷாந்த் இருந்த அதே ப்லாட்லே ரெண்டு பேரும் ஸ்டே பண்ணிக்கறோம். நிஷாந்த்க்கு கல்யாணம் ஆகுற வர... அப்புறம் நான் வேற இடம் பாக்க வேண்டியது தான்." அவன் இயல்பாக தான் சொன்னான். திவ்யாவிற்கு உறுத்தலாக இருந்தது.


ஏர்போர்ட் செல்லும் வரை யாரும் எதுவும் பேசி கொள்ளவில்லை. 
லகேஜ் செக் இன் செய்த பின் திவ்யாவிடம் விடை பெற்று செல்ல இருவரும் வந்தனர்.
"பாய் திவ்யா.. டேக் கேர். கீப் இன் டச். இனி எப்போ சந்திப்போம்னு தெரில. ஆனா லண்டன் வந்தா என்னை கண்டிப்பா கூப்பிடு."
"எப்படி பிராகாஷ் உன்னால் இத்தனை எளிதாக சொல்ல முடியுது? உனக்கு என் மேல அப்போ விருப்பம் இல்லையா?" இதழ் பிரிக்காமல் திவ்யா கேள்வி கேட்டு கொண்டிருந்தாள்.
"திவ்யா. பிரகாஷ் இனி லண்டன் லே செட்டில் ஆக பிளான். இனி எப்போ இந்தியா வரது?" நிஷாந்த் தன்னால் முடிந்ததை சொல்லி தீர்த்தான்.
"ஆமா திவ்யா. இனி இங்கே இருக்க ஒண்ணுமில்லை. பெங்களூர் வீட்டே விக்க ஏற்பாடு பண்ண சொல்லிட்டேன். இனி நீ லண்டன் வந்தா என்னை பாக்க வா."


இருவரும் கண் பார்வையில் இருந்து மறையும் வரை திவ்யா ஒன்றுமே சொல்லவும் இல்லை, செய்யவும் இல்லை. ஆனால் அவர்கள் மறைந்த அடுத்த நொடி அவள் உள்ளம் அவளை விட்டு இறங்கி ஓடுவதை பார்த்தாள். இது என்ன இத்தனை சுமை. இது என்ன இத்தனை வேதனை. "பிரகாஷின் திவ்யாவாகவே இருந்து விட்டு போகிறேனே. அவன் என்னுள் திவ்யாவை பார்த்தால் என்ன? அவனுடன் இருக்கும் வாய்ப்பாவது கிடைக்குமே. இனி நான் யாராக இருக்க நினைத்து ஆசை பட வேண்டாமே.. ஆனால் தவற விட்டு விட்டேனா? அந்த நொடி பிரகாஷுடன் சென்று விட்டதா? இனி பிரகாஷ் எனக்கு இல்லையா?" பிரிவின் வலியும், ஏக்கமும் திவ்யாவை தாக்கியது. கண்கள் பனிக்க தொடங்கியது. இனி பிரகாஷ் தனக்கு இல்லை என்ற வேதனையுடன் வீடு திரும்பினாள்.


இரவு முடிந்து அந்த தூரத்து வானம் சிகப்பு தூரிகை கொண்டு ஒரு அழகிய ஓவியம் வரைந்து கொண்டு இருந்த ஒரு காலை நேரம்...


மெல்லிய குளிர் உடலை தழுவ போர்வையை முகம் மேல் போர்த்தி கொண்டு கண்களை மூடினாள் திவ்யா. ஒரு முறை முழித்த பின் வரும் தூக்கம் வெறும் கனவுகளால் நிறைந்து இருக்கும்... திவ்யா கண்களை மூடி ஒரு முறை ப்ரக்காஷை நினைத்து கொண்டாள். இந்நேரம் அவன் எதிர் பார்த்த கனவு நிறைவேறி கொண்டு இருக்கும்... மலை தாண்டி கடல் தாண்டி அவன் சென்று கொண்டிருப்பான்... தன் கனவு கோட்டைகள் அங்கே உருவாக்க பட்டுவிட்டன.. இவன் சென்று அதில் குடியேற வேண்டியது தான் பாக்கி. சில நேரம் தன்னையும் அறியாமல் கண்களில் நீர் சுரக்கும்... ஆனால் ஒரு வினாடி தான்... பனித்திருந்த கண்கள் காய்ந்து விடும்... தொலைந்து போனால் கூட தேடி விடலாம் கரைந்து போனதை அடைய முடியாது. திவ்யா ப்ரக்காஷ் மனதில் இருந்து கரைந்து விட்டாள்...


லண்டனில் ப்ராகஷும் நிஷாந்தும் வந்து இறங்கிய அடுத்த நொடி...


"தப்பு பண்ணிட்டேன் நிஷாந்த்... நான் தப்பு பண்ணிட்டேன்..."
"என்ன ஆச்சு பிரகாஷ்?"
"நான் திவ்யாவை விரும்பறேன் நிஷாந்த். ஏர்போர்ட்ல திவ்யாவை விட்டு வரும் போது அவ அழுதா. நான் பாத்தேன். ஷி லைக்ஸ் மீ நிஷாந்த். நான் அவள்ட்ட போணும்"
"பிரகாஷ்..."
"எஸ். சொல்லாம அவளை ஏக்கதுலே விட்டுட்டு வந்திட்டேன். திவ்யா எப்போதுமே விட்டுட்டு வந்தா மாதிரி நான் என் திவ்யாகிட்ட பண்ண கூடாது... ஐ நீட் டு டாக் டு ஹேர்"
"கால் ஹேர் பிரகாஷ்... அது தான் நல்ல ஐடியா... கால் ஹேர்"
"எஸ்.. எஸ்... ஐ வில்.. என்னோட திவ்யாக்கு நான் கால் பண்றேன். அவளை நான் கல்யாணம் பண்ணிக்கறதா சொல்லத்தான் போறேன். இனி எப்போதுமே திவ்யாவோட தான் இருக்க போறேன். ஐ வில் நெவெர் லீவ் ஹேர் அலோன்."


விரைவாக பிரகாஷின் கால்கள் அந்த தொலைபேசி பெட்டியை நோக்கி நகர்ந்தது....


- முற்றும்

Comments

  1. Nice.

    ' ஒரு முறை முழித்த பின் வரும் தூக்கம் வெறும் கனவுகளால் நிறைந்து இருக்கும்' .. How true :)

    ReplyDelete
  2. I say that is a very practical and intresting fact highlighted in this stiry. Once lost they will never take chances for anything..a true word. Hats off!!

    ReplyDelete

Post a Comment

What do you think? Please share your views...