திருட்டு பயலே!!!

'பாலு. பக்கத்துக்கு கடைக்கு போய் ரெண்டு பொட்டலம் தேங்காய் எண்ணை வாங்கிட்டு வாடா. 3 வாட்டி சொல்றேன். உன் காதுல எதாச்சும் விழுதா? ' அம்மா வீரிட்டு கத்தி கொண்டிருந்தாள். ஐந்தாம் வகுப்பு பாட புத்கத்தை மூடி வைத்து விட்டு அலமாரியில் இருந்த காசு டப்பாவில் இருந்து 20 ருபாய் எடுத்துக்கொண்டு பாலு ஓடினான்.

அம்மா எப்பவுமே இப்படி தான். மளிகை வாங்கும் பொது எல்லாவற்றையும் வாங்கி கொள்ள மாட்டாள். இப்படி திடீர் திடீர் என்று படித்து கொண்டிருக்கும்போது தான் உயிரை எடுப்பாள். சக வகுப்பு சகாக்கள் எல்லாரும் அவர் வீட்டில் பெரிய பெரிய சூப்பர் மார்கெட்டில் தான் சமான் வாங்குவார்கள். அனால் அம்மா மட்டும் இந்த பக்கத்துக்கு கடையில் தான் எப்பவுமே எல்லாமே வாங்குகிறாள். 'மானம் போது' என்று சொன்னால் 'உங்க அப்பா பாக்கற வேலைக்கு இங்க தான்டா வாங்க முடியும்' என்று சொல்வாள். ஒன்றா இரண்டா 3 வருடமாக இப்படி தான் பாலுவிற்கும் அம்மாவிற்கும் சண்டை.

அடுத்த நாளும் இப்படி தான். பள்ளிக்கு கிளம்பி கொண்டிருக்கும் போது போய் முட்டை வாங்கி வர சொன்னாள். 'இதே பொழப்பா போச்சு' என்று அலுத்துக்கொண்டு பாலு கடை வாசல் சென்ற போது அங்கே ரமேஷ் நின்றிருந்தான். 

'டேய் ரமேசு.. இங்க என்னடா பண்ற??'
'வீட்லே கெஸ்ட் வந்திருக்காங்க. அம்மா சக்கரை வாங்கியார சொல்லிச்சு.. அதான் வந்தேன்...'
ரமேஷ் பாலுவின் உயிர் நண்பன். இருவரின் அப்பாவும் மின் வாரியத்தில் தான் பணி செய்கிறார்கள். அதனால் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாய் மாறிவிட்டனர்.
இருவரும் தான் வாங்க வந்த பொருளை வாங்கிய பின் ரமேஷ் ஒரு சாக்லேட் வாங்கினான்.
'டேய்.. அம்மா எதுவும் சொல்லாதா? நீ பாட்டுக்கு முட்டாய் வாங்கிட்டு இருக்கே??'
'நான் காசு டப்பாலே இருந்து தான் காசு எடுக்கறேன். திரும்ப ஒரு 5 ருபாய் கம்மிய போட்ட யாருக்கு தெரிய போது?'

3 முறை அதற்கு  பிறகு பாலு முயற்சி செய்து பார்த்தான். ஆனால் மனசு ஒத்துகொள்ளவில்லை. நான்காவது முறையாக அம்மா தக்காளி வாங்க கடைக்கு அனுப்பிய போது தான் அவன் மொத்த தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ரொம்ப நாளாக ஏங்கி  தவித்த 5 ஸ்டார் சாக்லேட் வாங்கினான்.

வீட்டுக்கு திரும்பிய போது வேர்த்து கொட்டியது. என்றும் இல்லாமல் இன்று அம்மா காசு டப்பா கீழேயே உக்காந்து கொண்டு காய் நறுக்கி கொண்டிருந்தாள்.

'எவ்ளோ டா தக்காளி?'
'ம்ம்ம்.. அது... அது வந்து 12 ருபாய் மா'
'12 ஆ? காலைலே அப்பா வாங்கியார போனாரே... அப்போ 8 ருபாய் தானடா சொன்னாரு? எங்க வாங்கின நீ?'
'அம்மா... அது.. அது வந்து..'
'டேய்.. என்னடா திக்கற? என்ன திருட்டுத்தனம் பண்ண?'
'அம்மா... இல்லை மா.'

பொளேர் என்று முதுகில் விழுந்தது. அப்பா. வீடு திரும்பி இருந்தார். அதுவும் அம்மா பேசியதை கேட்டு விட்டிருந்தார். டம் டும் என்று முதுகு தண்டு உடைய அடி விழுந்தது.

'திருடுவியா? சொல்றா.. திருட்டு பயலே.. எங்கடா போச்சு புத்தி? படிக்கற பயலா நீ?? யார்ட்ட இருந்து டா கத்துகிட்ட? திருட்டு நாயே!!' அப்பா சரமாரியாக திட்டி தீர்த்தார்.

இரவு சாப்பிட கூட இல்லை. அப்படியே உறங்கி போனான் பாலு.

காலை எழுந்திருந்த போது அம்மாவும் அப்பாவும் ஒன்றுமே நடக்காதது போல் தான் இருந்தனர். அன்று ஞாயிறு வேறு. முழு நாளும் இவர்கள் முகத்தில் தான் முழிக்க வேண்டும்.

'டேய்.. பாலு' அப்பா அழைத்தார்.
'என்னப்பா?'
'முகம் கழுவிட்டு என் கூட வா. மார்கெட்டு போயிட்டு வரலாம்'


மார்கெட்டில் கூட்டம் எக்கச்சக்கம். ஒவ்வொரு கடையாய் நின்று காய் வாங்கி கொண்டே வந்தார்கள். தக்காளி கடையில் நின்ற போது கூட்டம் ரொம்ப அதிகமாய் இருந்தது. நல்ல தக்காளியாய் பார்த்து அப்பா பொருக்கி போட்டார்.

'இது ஒரு ரெண்டு கிலோ போடுப்பா. எவ்ளோ ஆச்சு?'
'16 ரூவா சார்'
'16 ஆ? 15 ஆ போடுப்பா.. ரெண்டு பழம் எக்ஸ்ட்ரா போடு பா'
'இல்ல சார். கட்டுபடி ஆகாது.'

அந்த ஆள் பையில் தக்காளி நிரப்பும் போது, அப்பா இந்த பக்கம் ரெண்டு தக்காளி எடுத்து பையில் போட்டு கொண்டு என்னை பார்த்து சிரித்தார்.
'யாருக்கு தெரிய போது??'

நேற்று நடந்த சம்பவம் ஒரு முறை கண் முன்னே நிழலாடியது...
"திருடுவியா? சொல்றா.. திருட்டு பயலே.. எங்கடா போச்சு புத்தி? படிக்கற பயலா நீ?? யார்ட்ட இருந்து டா கத்துகிட்ட? திருட்டு நாயே!!"
அப்பாவிற்கு கற்று கொடுக்க ஆள் இல்லையே என்று நினைக்கையில் நேற்று அடித்தது வலித்தது...


Comments

  1. Simple story with a good moral. People no longer write these stuff so I am glad you picked up this subject. And as always keep up the good work. Great going..

    ReplyDelete
  2. அருமையான கதை.நல்ல பாடம்

    ReplyDelete

Post a Comment

What do you think? Please share your views...