நடுநிசி கவிதைகள் - பாகம் 1

நீர் தேடி நீ பிரிய பாலையெல்லாம் நீருற்று ஆக...
உனைத் தேடி நான் அலைய கடலெல்லாம் கரை ஒதுங்குமோ!
***************************
உனது பல ஓவியங்களில் ஒரு ஓவியம் அல்ல...
நீ தீட்டும் ஒவ்வொரு ஓவியத்தின் காகித பக்கம் நான்!
உன் வாழ்வில் வந்து போன தென்றல் அல்ல
உன் உயிர்த்துடிப்பில் கலந்த சுவாச காற்று நான்!
***************************
விடியல்கள் இரவுகள் புரியவில்லை...
நடுநிசி மட்டுமே இன்று வேறு பொழுதில்லை
வலியில்லை என்னில் வருத்தமும் இல்லை
காயங்கள் தான் இன்னும் ஆறவில்லை...
காத்திருக்கவில்லை... கண்கள் ஏனோ உறங்குவதில்லை...
அங்கு இதயம் கனத்து போனதா புரியவில்லை
கொஞ்சமும் மிச்சம் இல்லாமல் தீர்ந்து போனதா விளங்கவில்லை!
இங்கோ நினைக்க மறப்பதில்லை...
ஒரு முறைக்கூட மறக்க மனதால் முடிவதில்லை...
***************************
இருதயம் கொஞ்சம் இளைப்பாற துடிக்கிறது...
தனிமை துணையாக நடக்க கேட்கிறது...
யோசனைகள் இல்லாமல் விட்டத்தை வெறிக்க...
கேள்விகள் இல்லாமல் சம்பாஷணைகள் நிகழ...
எத்தனை காலம் முடிந்தாலும் உணர்வுகள் மாறாமல்...
எங்கோ போய்க்கொண்டும் எதையோ தேடிக் கொண்டும்
வழியில் நின்று தேநீர் அருந்திய பின்
இந்த இனிமையான பயணங்கள் மீண்டும் தொடரும்....
***************************
இத்தனை நாள் எங்கிருந்தாய்
என் வாழ்வில் மறைந்து கொண்டு வண்ணமாக்கினாய்...
இதயம் துடிக்கும் போதெல்லாம் பக்கத்திலே இருந்திருக்கிறாய்...
நான் துயில் கொள்ளும் வேலையில் அருகில் நின்றிருக்கிறாய்...
ஒரு முறை கூட பிரியாமல் புரிந்திருக்கிறாய்
என் உயிராக அல்ல நானாகவே வாழ்ந்திருக்கிறாய்!
***************************
நிலவு வானம் மேகமெங்கும் நான் உன்னை தேடி திரிகிறேன்...
விழி நீரில் வழியும் அன்பிடம் ஆறுதல் சொல்லி வருகிறேன்.
தேடி தேடி தவிக்கும் நான் தேடுவதெல்லாம் உன்னையே...
நீ தூக்கி சென்ற உயிரின் பாதி மற்ற பாதி கொடுக்கவே!
***************************
திருவிழாவில் தொலைந்து போன குழந்தையென திரிகிறேன்...
உன் புன்சிரிப்பை கண்ட மறுநொடி குதூகலத்தில் குதிக்கிறேன்...
ஒரு சிரிப்பில் நான் காணும் உலகம் மொத்தம் இருக்கையில்
எம்முறையேனும் பரவாயில்லை நான் தொலைந்து தொலைந்து கிடைத்திடுவேன்...
***************************
திருப்பங்கள் பல பக்கம் வாழ்க்கையில்
சரியெது என்பது நம் கையில்
அத்திருப்பங்களில் மோதி கொண்டோம் நாம்...
தடுமாறிய நொடிகள்... வழி மாறிய திசைகள்
நம் திசை வேறன்று திரும்பி நடக்கிறோம்
விபத்தின் தாக்கங்களை மனதில் சுமந்து கொண்டு!
***************************
உனை சுமக்கும் உயிராதலால்
அவ்வுயிர் சுமக்கும் உடல்...
***************************
உனை நான் நினைக்கும் ஒவ்வோர் நொடியில்
வின்னில் புது நட்சத்திரம் ஒன்று பிறந்திடும்
எனை நீ வந்து காணும் அந்நாளில்
அவை என் கண்களில் குடியேறி மின்னிடும்
***************************
உனை நினைத்து எழுதும் வார்த்தைகள்
தனை மறந்து கவிதையாய் மாறுகிறது...
உயிர் மெய் சேரும் தேன் தமிழில்
அழகாய் எழுத்து பிழைகள் நிகழ்கிறது!!
***************************
சிந்திய மழைத்துளி தரை பட்டு சிதறும் துளிகளை
கண்களில் ஓரம் நிறைக்க அது கொஞ்சம் கசிய
நெஞ்சத்தில் பாரம் உனை காண ஏங்கும்
செய்வதறியாது துடிக்கும் இதயம் இங்கு
நிழலாக நீயோ நிஜமாகவோ
ஒரு முறையேனும் வருவாயா
***************************
நான் எங்கோ தொலைந்து போக வேண்டும்...
இருளில் சற்றே மறைந்து போக வேண்டும்...
மழையில் கொஞ்சம் கரைந்து போக வேண்டும்...
காற்றில் காற்றாய் இணைந்து போக வேண்டும்!
பின் ஒரு அழகிய இரவில்...
சில்லென சிறு மழையாய்...
மழைத்தூறலை சுமக்கும் தென்றலாய்...
உன்னிடம் நான் கிடைத்திட வேண்டும்!!
***************************
கதை சொல்லும் நினைவுகள்...
சிநேகம் பேசிடும் ஞாபகங்கள்...
பொருளாய் பல... எழுத்துகளாய் சில....
உயிராய் நிறைந்து... உணர்வாய் கலந்து...
தனியே நின்று சிரித்து கொள்கிறேன்
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்து விட்ட நிறைவு!
***************************
விண்ணில் ஏறியே நான் பனித்துளியாய் மாறினேன்
கண்கள் மூடியே நான் மெதுவாய் வீழ்கிறேன்
தூரம் பாரம் யாவையும் மறக்கிறேன்
பூமியில் ஏந்திக்கொள்ள உன் வாசலை நாடினேன்...
***************************
உனை நினைத்து செல்கையில் தூரம் கூட பக்கமாகும்
உன் பெயர் சொல்லி போகையில் படிகள் கூட பனி போல் மாறும்
***************************
நான் போகும் பாதையில்
பின்னோக்கு கண்ணாடியில்
நிறைந்திருப்பதெல்லாம் உன் முகம் தான்
***************************
நிழலில் நிஜம்...
இருளில் ஒளி...
முடிவில் தொடர்...
மனதில் மதி...
மயக்கத்தில் தெளிவு...
எனக்குள் நீ...
மையத்தில் என்னுலகம்...
***************************
உள்ளம் அதனை கடத்தி சென்றாய்
உயிர் அதனை சிறையில் அடைத்தாய்
விழிகளில் என்னை பூட்டி கொண்டு
வழி எங்கும் ஏன் தேடி திரிகிறாய்
***************************
நாட்கள் மெல்ல கடந்து போகிறது
தனியே நெஞ்சம் சிதைந்து போகிறது
இரவுகள் பகலாய் மாற போகிறது
நேரம் பின்னோக்கி ஓட போகிறது
இந்த தூரம் பாரம் தாளாமல்
இக்கணமே இதயம் உறையப் போகிறது
விழிநீர் இனி எல்லாம் வற்றி போகிறது
***************************
இரவுகள் பகல்கள்...
கண்டங்கள்... சமுத்திரங்கள்...
இவை எல்லாம் கடந்து போகும் என் நிழல்...
நான் மட்டும் உன்னிடம் தங்கிவிட்டேன்!
***************************
மழை பொழிகையில் நான் மட்டும் நனைகிறேன்...
கார்காலத்தில் நான் அழகாய் உதிர்கிறேன்...
இமை மூடுகையில் நான் உனை காண்கிறேன்...
நல்லிரவு நேரத்தில் நான் மட்டும் விழித்திருக்கிறேன்...
***************************
தோற்று போய் வீழ்கையில் தலை சாய்த்திட
சிதைந்து போய் மடிகையில் மடி ஏந்திட
கவலைகளை பகிர்ந்து கொள்ள தோள் தட்டிட
என் கனவுகளை சொல்கையில் செவி நீட்டிட
தவறுகளில் வீழ்கையில் எனைத் திருத்திட
பாதைகளை மாற்றி எனக்கு வழி காட்டிட
என் தாயாக எனை என்றும் சுமந்திட
இன்று தாயாகியும் நான் பிள்ளையாகிட...
***************************
அன்னையாக மாறி பிற நெஞ்சங்களை நேசிக்கும் உள்ளங்கள் எல்லாம் தாய் உள்ளமே...
தாய் என்பது பெண்ணினமாயினும்
தாய்மை என்பது உணர்வினம்...
அன்னையர் தின வாழ்த்துக்கள்!
***************************
அந்தி மாலை நேரத்தில்
நீராற்றின் கரை ஓரத்தில்
ஒளி கீற்றில் கதைகள் எழுதவும்
நிழற்படங்கள் நிஜங்கள் ஆகவும்
நீ உனை மறந்து செல்கையில்
தடுமாறி கால்கள் பதிக்கையில்
மண்ணீர் உன் கால்கள் நனைத்தது
புல்லெல்லாம் மயங்கி தவித்தது
நன் நீரில் பாதம் அலசினாய்
நான் கரைந்து இங்கு நழுவினேன்
உன் சேற்று கால்கள் எழுதிய
புது கவிதையாய் நானும் பிறக்கிறேன்!
***************************
உன் பயணங்களிலெல்லாம் நான் உன் கைகோர்த்து கொண்டு நடப்பேன்
மௌன வார்த்தைகள் ஆயிரம் கொண்டு உன் கண்களில் கவிதை தீட்டுவேன்
உரையாடல் எதுவுமின்றி உன்னிடம் கதைகள் நூறு பேசுவேன்
தூரம் எத்தனை இருந்தும் நீ தோள் சாய நான் என்றும் இருப்பேன்...
காற்று வீசும் போது உன் தலை கோதி விடுவேன்
நீ அங்கு தலை சாய்க்கும் போது இங்கு நான் மடி கொடுத்திருப்பேன்!
***************************
புத்தகத்தை மூடுவதால் கதைகள் முடிவதில்லை...
முற்றுப்புள்ளி வைத்ததினால் அத்தியாயங்கள் முடிவதில்லை...
கண்களை மூடி கொண்டதால் காட்சிகள் மறைவதில்லை....
நீ தள்ளி நின்றதினால் தூரங்கள் பெருகுவதில்லை....
***************************
பக்கங்கள் முடிந்தாலும் அத்தியாயங்கள் பாக்கி...
எழுத்தாளன் நினைத்தால் முடிவுகளை மாற்றலாம்...
முடிக்க எண்ணமில்லாமல் மீண்டும் தொடரலாம்...
முற்று புள்ளி வைத்துவிட்டு புத்தகத்தையும்  மூடலாம்...
பக்கங்கள் முடிந்தாலும் அத்தியாயங்கள் பாக்கி...
***************************
இருதயம் கொஞ்சம் இளைப்பாற துடிக்கிறது...
தனிமை துணையாக நடக்க கேட்கிறது...
யோசனைகள் இல்லாமல் விட்டத்தை வெறிக்க...
கேள்விகள் இல்லாமல் சம்பாஷணைகள் நிகழ...
எத்தனை காலம் முடிந்தாலும் உணர்வுகள் மாறாமல்...
எங்கோ போய்க்கொண்டும் எதையோ தேடி கொண்டும்
வழியில் நின்று தேநீர் அருந்திய பின்
இந்த இனிமையான பயணங்கள் மீண்டும் தொடரும்....
***************************
உன் கண்களின் வெளிச்ச கீற்றில் நான் ஒளி கொள்கிறேன்...
உன் இதழ் விரிக்கும் புன்னகையில் நான் வண்ணம் கொள்கிறேன்...
உன் வார்த்தை பேசும் கவிதைகளில் நான் அர்த்தம் கொள்கிறேன்...
உன் இதயம் துடிக்கும் துடிப்பினிலே நான் உயிர் கொள்கிறேன்...
***************************
நான் நினைப்பதை மறப்பதா?
நீ மறந்ததை நினைப்பதா?
***************************
வாசல் தேடி வருகிறேன் கதவடைத்து செல்கிறாய்...
உன் வாசம் வீசும் முன்னமே பேசாமல் தள்ளி செல்கிறாய்...
உன் வழி முடக்கி நிற்கிறேன் என் முகம் காணாமல் போகிறாய்..
என் விழி கேட்கும் கேள்விக்கு விடை தராமல் விளகுகிறாய்...
இல்லை என்று சொன்னால் நான் திரும்பி பார்க்க மாட்டேன்...
உனக்குள் நான் இருப்பதால் தானே ஏங்கி இங்கு நிற்கிறேன்!
***************************
உன் கை கோர்ப்பதும் 
உன் தோள் சாய்வதும் 
உன் குரல் கேட்டு அதில் எனை மறப்பதும்
உனை நினைப்பதும்
வான் பறப்பதும்
உனை தேடித் தேடி தவிப்பதும்
உன்னில் இனிப்பதும் உனை ரசிப்பதும் 
உனக்காக பொழுதெல்லாம் துடிப்பதும்
என்னுள் எதிர்பார்ப்புகள் இல்லாதிருப்பதும் 
பின் எதிர் நோக்கி கண்கள் பனித்ததும்
உன்னலென்பதை மறைப்பதும்
தினம் தினம் நிகழ்வதிங்கே... 
***************************
கடலாக நான் மாற எனை இழுக்கும் அலையாகிறாய்...
தொடுவானம் நான் எனில் என்னுள் தினம் உதிக்கிறாய்...
காற்றெல்லாம் நானாக புகை போல் என்னில் மறைகிறாய்...
நான் கைப்பற்ற நினைக்கும் நொடி சட்டென எங்கோ பறக்கிறாய்...
***************************
இரவு கூட்டம் தேடித்திரியும் நட்சத்திரம் நீ...
என் இமை மூடியும் நான் காணும் வெளிச்சக்கீற்றும் நீ...
நிலவு போர்த்திக்கொள்ள துடிக்கும் அழகிய வான் மேகம் நீ..
நான் நினைத்திருக்கும் கணப்பொழுதின் விநாடிகளும் நீ...
***************************
என் கண்ணிமைக்கும் நேரத்தின் இடைவெளிகளிலே
என் உயிர் துடிக்கும் கணங்கள் மத்தியிலே
உனை நினைக்காத பொழுதென்பதே எனக்கில்லை...
உன் நிழல் தோன்றா பிம்பங்கள் நான் காண்பதில்லை!!
***************************
உனை நீயாக எனக்கு தரும் நாளை எதிர்நோக்குகிறேன்...
எனை உனக்காக அழகாக அன்று நான் மாற்றிடுவேன்...
உன் முதல் பார்வை என் விழி இரண்டை துளைத்து போகையில்...
உயிர் உருகி உணர்வுகள் கரைந்து உன் கைகளிலே சரிந்திடுவேன்!
***************************
என் நெஞ்சத்தில் தளர்ந்து இதயத்தில் விரிந்து 
தினம் என் உயிரில் நீ கலக்கிறாய்...
என் கண்களில் பூத்து எண்ணங்களில் மலர்ந்து 
தினம் என் நடுநிசி கவிதையில் பிறக்கிறாய்...
***************************
விழி பேசும் நேரங்களை விட
உன்னுடன் தமிழ் பேசும் நேரம் அழகு...
நினைத்துருகும் நேரங்களை விட
உனக்காக காத்துருகும் நேரம் அழகு!
***************************
என்ன வாழ்க்கை இது எங்கு போய் கொண்டிருக்கிறோம்...
காலை முதல் மாலை வரை சக்கரம் கட்டி திரிகிறோம்...
தேடி வரும் காகங்களுக்கு சோறு போட யாருமில்லை...
சின்ன குயில் பாடும் பாட்டை கேக்க நேரம் இங்கு இல்லை...
வாசல் நிறைந்த மழை நீரில் கப்பல் விட நேரமில்லை...
பேசி சிரித்த திண்ணைகள் வீட்டில் இன்று காணவில்லை...
எல்லாம் எங்கு போனது... இல்லை என்றானது...
நிலவை காட்டி சோறு ஊட்டும் நேரம் எங்கு போனதோ...
பழைய பாட்டை கேட்டு தூங்கும் காலம் மாறி போனதோ...
கதைகள் பேசி சிரித்திடும் இன்பம் எல்லாம் போனது...
இருக்கும் கொஞ்ச நேரமும் இல்லையென்றானது...
பிடிக்கவில்லை இந்த வாழ்க்கை விட்டு விலக முடியுமோ...
பிடித்ததெல்லாம் செய்திட எத்தனை காலம் ஆகுமோ...
***************************
சுற்றும் பூமி சுழல்வது போல் நானுனை சுற்றி வருகிறேன்...
மேகம் மிதக்கும் காரணத்தால் நானும் இங்கு மிதக்கிறேன்...
ஓடும் நதியும் ஓடுதே ஏனென்று தெரியுமா?
கொட்டும் அருவி விழுவதும் எதனால் என்று புரியுமா?
தூரம் தொலைவு என்பதெல்லாம் இங்கு ஒன்றானதே...
உன் கண்கள் கண்ட நொடியிலே புவியியல் மாற்றம் நிகழுமே...
***************************
மழை நின்ற பின்னும் மண் வாசம் வேண்டும்...
இழை உதிர்ந்த பின்னும் பூ மலர வேண்டும்...
விழி மூடினாலும் உன் முகம் காண வேண்டும்...
வழி பிரிந்தாலும் உன் விரல் கோர்க்க வேண்டும்...
நிஜமென்று என்னருகில் நீ என்றும் வேண்டும்...
உன் நிழலாவது அனுப்பிடு இன்று அது போதும்!
***************************
எனக்குள் நீ செய்த மாற்றத்தில் நான் என்னை மறக்கிறேன்....
அழகாக இழந்து என்னை நான் தினம் உன்னில் காண்கிறேன்...
விழி பேசும் உன் வார்த்தைகளில் நானும் மௌனம் கொள்கிறேன்...
வழி எங்கும் நீ தந்த அன்பினை பூக்களாய் தூவி செல்கிறேன்...
***************************
மழை நின்ற பின்னும் மண் வாசம் வேண்டும்...
இழை உதிர்ந்த பின்னும் பூ மலர வேண்டும்...
விழி மூடினாலும் உன் முகம் காண வேண்டும்...
வழி பிரிந்து போனாலும் உன் விறல் கோர்க்க வேண்டும்...
நிஜமென்று என்னருகில் நீ  என்றும் வேண்டும்... 
உன் நிழலாவது அனுப்பிடு இன்று அது போதும்...
***************************
துடிப்பது மட்டுமா விழிப்பதும் உன்னாலே...
சிரிப்பது மட்டுமா சிதைவதும் உன்னாலே...
இருப்பதோர் இதயம் இனி இடம் மாறிட வழியில்லை...
கொடுத்ததே நீ தான் அதை திருப்பி கேட்பது முறையில்லை...
***************************
என்ன எதிர்பார்க்கிறாய் எனை என்ன செய்து போகிறாய்...
காய்ந்த பூந்தொட்டியில் கொஞ்சம் தண்ணீர் தெளித்து போகிறாய்...
தீர்ந்து போன கோப்பையில் கொஞ்சம் தேநீர் ஊற்றி செல்கிறாய்...
தொலைந்த இருட்டினில் கொஞ்சம் வெளிச்சம் காட்டி மறைகிறாய்...
மறந்து நான் நிற்கையில் என் பெயர் அழைத்து ஒளிகிறாய்...
என்ன எதிர்பார்க்கிறாய் எனை என்ன செய்து போகிறாய்
***************************
என் வார்த்தைகளைஅள்ளி சென்று
இனி கவிதை எழுது என்கிறாய்..
நான் மௌனம் சுமந்து நிற்க்கையில்
எனை கேலி செய்து சிரிக்கிறாய்...
உனை பார்க்கும் அந்த பொழுதினில்
வார்த்தை தேவையில்லையே...
நான் பார்த்திருக்கும் கவிதை நீ
என் கண்கள் எழுதும் உன்னையே!
***************************
இரவு நேரத்து கட்டிலில் 
இமை மூடி தூங்கும் உன்னை 
இதமாய் கட்டி அணைத்து 
இதழ் முத்தம் பதித்து..
"என்னை பிடிக்குமா" என்று கேட்கையில்...
விழி பிரிக்காமல் சிரித்து 
அழகாய் தலை அசைத்து 
உன் மெய் அன்பை சொல்லும் 
அக்கணப்பொழுதில் என்னை இழக்கிறேன்...
ஓர் தாயாய் நான் என் வாழ்வில் 
கண்ட பேரின்பத்தின் பிம்பம் நீயடி!!
***************************
உன் கண்களில் விரிந்திடும் கனவா நான்
இல்லை உன் கைகளில் மலர்ந்திடும் சிறு பூவா?!
உன் சுவாசத்தில் சிதறிடும் நீர்குமிழியா நான் 
இல்லை உன் நெஞ்சினில் சரிந்திடும் பனித்துளியா?!
உன் இதழில் நழுவிடும் புன்சிரிப்பா நான் 
இல்லை உன் இதயத்தை தட்டிடும் உயிர் துடிப்பா?!!
***************************
நீ அனுப்பும் இதய மழை அதில் நான் மூழ்கிப் போகிறேன்....
உன்னிரு விழி வின்வெளியில் நான் எங்கோ தொலைந்துப் போகிறேன்...
யாரும் பார்த்திரா அழகிய உலகில் கண் விழித்து பார்க்கிறேன்...
உன் குரல் கேட்கும் திசை அங்கு உனைத் தொடர்ந்து வருகிறேன்...
வழித்துணையாய் உன் பாத சுவடுகளுடன் நான் சிரித்து பேசுகிறேன்...
என் கைக்கோர்க்கும் உன் நிழல்... கொஞ்சம் தோள் சாய்கிறேன்!!
***************************
கைப்பேசி பெட்டிக்குள் அடங்கி போன முகங்கள் வேண்டாம்
உன் கைக்கோர்க்கும் நொடிகள் எல்லாம் எனக்கு வேண்டும்...
உன் பொழுதுபோக்கை கற்பனை செய்யும் நினைவுகள் வேண்டாம்
நம் பொழுதுகளெல்லாம் என் கண்ணெதிரே கழிந்திட வேண்டும்...
விசைப்பலகை தட்டி அனுப்பும் வார்த்தைகள் வேண்டாம்
உன் விழிப்பார்த்து எனதன்பை சொல்லிட வேண்டும்...
தூரங்களை சுமந்திடும் வலிகள் வேண்டாம்
இனி எனதருகே எப்பொழுதும் நீ வேண்டும்!
***************************
உன்னிரு புருவத்தின் மத்தியில்
அழகாய் சிறு வீடு கட்டிக் கொள்வேன்...
உன்னிமை மூடி திறப்பதெல்லாம்
என்னிரவு பகலாய் நினைத்துக் கொள்வேன்!
***************************
உனை கண்ட நாள் முதல்... நீ வந்த நாள் முதல்...
வானில் நின்று தரை பார்க்கிறேன்...
மழையில் காய்ந்து வெயில் நனைகிறேன்...
கடலில் நடந்து கால் பதிக்கிறேன்...
பனியில் நனைந்து குளிர் காய்கிறேன்...
இரவின் மடியில் கனவாகிறேன்... 
என் இதயம் துடிக்க மறந்து போகிறேன்...
***************************
உன் கனவில் நானும்... என் கனவில் நீயும் இருந்தால்...
நாம் என்றுமே ஒன்றாக இருந்திடலாம்...
***************************
கடல் மேல் விழும் மழையென மனதோடு கரைகிறாய்...
வான் மிதக்கும் விண்மீன் என கண்களில் மிதக்கிறாய்...
விடியல்களின் வெண்பனியென நெஞ்சோடு குளிர்கிறாய்...
வானளாவிய மேகமாய்  உயிரினுள் விரிகிறாய்....
எத்தனை தூரம் ஆனாலும் எனை உன் கைகளால் எட்டி எப்படி பிடிக்கிறாய்??!! 
***************************
என் பாதைகளெல்லாம் பூக்கள் பூத்துள்ளது...
அந்த பூக்கள் எல்லாம் உன் பேர் சொல்கின்றது...
நீ சிரிக்கும் தருணம் அவை மலர்ந்து சிரிக்கிறது...
உனை நினைக்கும் நேரம் நறுமணம் வீசுகிறது...
நான் சுவாசிக்கும் மூச்சு காற்றிலெல்லாம் 
பூக்களின் வாசம் மட்டுமல்ல உன் புன்னகையும் கலந்துள்ளது...
***************************
கசங்கிய காகிதத்தை போல் ஒரு வாழ்க்கை... 
கோணல் மடிப்புகள் மறைவதில்லை...
அதில் நான் எழுத நினைத்த சித்திரம் ஒன்று
நேர்க்கோடுகள் அதற்க்கு தேவையில்லை...
விரிந்த காகிதத்தில் நான் கிறுக்கிய சித்திரம்
கோணலை அழகாக்கிடும் கோடுகளாய் நீ!!
***************************
​நீ வரும் திசையில் பனி விலக காத்திருக்கிறேன்...
உன் பாதை எங்கும் வெயில் வர கேட்டிருக்கிறேன்...
தூறல் மழை எல்லாம் உன் பயனத்தை தடையிட வாய்ப்பில்லை...
விழியெல்லாம் நீ தான் நிற்க்கிறாய்... ஒரு முறை முயன்று வா...
***************************
கனவாய் நிறைந்த என் இரவை நீ வந்து தட்டி எழுப்பினாய்...
கண் மூடி தூங்க முயற்சிக்கிறேன்... தினம்  தோற்று போகிறேன்...
ஒரு முறை விழித்த பின் வரும் தூக்கம் கனவுகளால் நிறைந்திருக்கும்...
விழித்த பின் கலைந்துபோக கனவல்ல நீ...
என் கண்களிலே  கரைந்து போன உயிருறவு...
***************************
தினம் உதிக்கும் சூரியனிற்காக 
அழகாய் தன்னை மாற்றும் மேகம்...
தினம் காத்திருந்து உன் விடியலுக்கு பின் 
இதமாய் பிறக்கும் என் கவிதை காவியம்...
***************************
நீ பேசாத வார்த்தைகளும்
நீ வீசாத பார்வைகளும்
நீ கேளாத எனதன்பிலும்
நீ காணாத எனதுயிரிலும்
என்றும் நிறைந்திருக்கும்!!
***************************
மாலை சூரியன் சினம் கொண்டு சிவக்கையில்
வானம் முழுதும் அழகாய் விரியும்...
இரவின் பக்கங்களில் கவிதையை கிறுக்கி
விடியலில் வரும் உனை எதிர்காணும்...
எண்ணி பார்க்க ஒன்றிரண்டு அல்ல
வின்வெளியில் வார்த்தைகள் அழகாய் சிதறும்..
எழுதிய கவிதையில் சிந்திய எனதன்பு விடிவெள்ளி நட்சத்திரமாய் தினம் மின்னும்!!
***************************
பறித்துக் கொள்ள உன் கைகளை தேடும்
சிறு பூவாக தினம் மலர்கிறேன்!!
எடுத்துக் கொள்ள உன் மனதை தேடும்
ஒரு உயிராய் இன்று பிறக்கிறேன்!!
***************************
அனுதினம் என் மாலை வானம் எல்லாம்
நான் உனக்கு சொல்ல நினைத்த விஷயங்களை எடுத்துக்கொண்டு
உன் காலைகளாக விடிகிறது...
***************************
அடுத்த முறை மழை பொழிகையில்
உன் மேல் விழும் ஓரிரு துளிகளில்
என் இதயத்துடிப்பை அனுப்பி வைப்பேன்...
பனித்த இரு கரங்களில் ஏந்திக் கொள்வாயா??!!
சிதறும் வலியை பொறுக்கும் நிலையில் நானில்லை!!
***************************
முதற்பிரை முழு நிலவு கண்ட மறுநொடி
உனது முகம் காண எண்ணி ஏங்கினேன்...
மறுபக்க விளிம்பில் இருப்பினும் நீ
என் மனதளவில் நிறைந்தவனாய்
என் விழி வழியில் மலரும் தினம்
உன் முகம் மறவா ஒரு பொழுதில்லை!!
***************************
பூவிருந்து சரிந்த ஓரிதழாய்...
கிளையிருந்து பறந்த ஓரிலையாய்...
துடுப்பின்றி இயங்கும் ஓர் படகாய் ...
கயிரறுந்து வீழ்ந்த ஓர் காற்றாடியாய்...
திக்கில்லாமல் தத்தளிக்கிறேன்...
திசை தெரியாமல் தவிக்கிறேன்...
பாதம் நடத்தி கூட்டிச்செல்லும் காற்று வேண்டாம்...
அவ்வப்போது என் பாதை தொட்டு தீண்டி செல்லும் சிறு தென்றல் போதும்!
***************************
நீ வெறுத்தாலும் விலகினாலும்...
நீ மறைந்தாலும் மறைத்தாலும் 
உன் எல்லாவற்றையும் நான் ரசிப்பேன்...
அவ்வப்போது உன் ஓவர் சீன் உட்பட...
***************************
நீ தலை சாய்த்து துயில் கொள்கையில்
உன் கண்களில் கசிந்தது களைப்பா?!
நான் கண்டேன் என நினைத்த உனதன்பா??!!
***************************
கடவுள் வந்தார்... வரம் தருகிறேன் என்றார்...
நினையாமல் நான் கேட்பது உனை மட்டுமே...
அதை விவரமாக எடுத்துச் சொன்னேன் கடவுளிடம்...
கடினமான விருப்பம் என்று விடை பெற்றவர் 
என் முகம் பார்த்து வேறொரு வரம் ஒன்றை கேளென்றார்...
நான் கேட்ட வரம் அவரை பயம் கொள்ள செய்ததோ...
உன்னையே தருகிறேன் என்று கூறி விட்டார்...
நினைத்த வரம் கிடைத்த களிப்பில் நான் இருக்க...
நான் அவரை பயம் கொள்ள செய்ததெல்லாம் இதை கேட்டு தான்...
எத்தனை தின்றாலும் எதனை தின்றாலும் 
அனிருத் மாதிரி பாடி டைப் வேண்டும்  எனக்கு...
***************************
உன் கருப்பு வண்ண காகிதத்தில் நான் காணாமல் தொலைகிறேன்...
உன் கை வரையும் ஓவியத்தில் என் உயிர் மூச்சை பெறுகிறேன்...
***************************
அவள்... 
இனிமையானவள்... கொஞ்சம் கடுமையானவள் ...
மென்மையானவள்...அதிகம் தன்மைகொண்டவள்...
பூ போன்றவள்...தேவையெனில் புயலானவள்...
எளிதே உடைபவள்... இருப்பினும் திரும்ப எழுபவள்...
வளைந்து கொடுப்பவள்... சற்றே வளைய வைப்பவள்...
கண்ணீரில் கரைந்து விழுபவள்... தோல் கொடுத்து தூக்கி விடுபவள்...
உனக்கானவள்... உயிரானவள்... உணர்வானவள்... 
உருகி கரைபவள்... உள்ளத்தில் உறைபவள்...
அவள்...
***************************
மறைந்தாலும் விலகினாலும்
கதிரவன் அவன் விட்டுச் சென்ற ஒளியிலே மிளிர்வது நிலவு...
நான் மலர்வதும் ஒளிர்வதும்
உனதன்பில் தினம் நான் எனை மறந்ததை சுமந்த நினைவு!
***************************
போகும் வழியாவும் பூக்களோ பாலையோ...
நடக்கும் பாதையாவும் முட்களோ கற்களோ...
நான் சேரும் இடம் நீயாக இருப்பின்
என் பயணம் எல்லாம் இனிமையே!
***************************
அதிகாலை வெயில் பூக்கள் மேல் விழும் தங்க ஒளி பார்க்க பிடிக்கும்...
பனி நீர்த்துளிகளை அள்ளி செல்லும் மேகம் பொழியும் சாரல் மழையில் நனைய பிடிக்கும்...
மாலை சூரியன் மறையும் முன் அவசரமாக வீடு திரும்பும் பறவைகளின் ஆரவாரம் கேட்க பிடிக்கும்...
இரவின் நிற ஒளியில் உன் கை வரைந்த வெளிச்ச சித்திரங்கள்... அதை ரசிக்க மிகவும் பிடிக்கும்!!
***************************
கடல் மணலில் கால் பதித்து நிற்கும் போது
அலை வந்து உள்ளிழுக்கும் உணர்வு போல
என் மனதினில் நீ பதித்த ஞாபகங்கள்
என்னிதயத்தின் ஆழத்தில் உயிர்த்தது...
அலை அடித்து கரையும் மணலல்ல
அவை...
ஆழ்கடலில் பதிந்த போன பொக்கிஷங்கள்!
***************************
​உனை நினைத்து ஓராயிரம் நடுநிசிக் கவிதைகள் தினம் தினம் என் உள்ளக்கதவை முட்டி நிற்கும்...
தினம் உனை சேர்வது ஓர் கவிதையே ஆயினும்
தோற்று போன கவிதைகள் வலி சுமந்து காத்திருக்கும் 
எனைப்போல்... மற்றுமொரு நடுநிசி இரவிற்காக...
*************************************
என் விழி நனைக்கும் உன் நினைவுகளின் ஆழத்தில் 
நீந்த தெரியாமல் தத்தளிக்கிறேன்...
என் பெயர் சொல்லும் மறு கணம் நான் மீண்டிடுவேன்...
கண்களில் உன் பெயரை பூட்டிக் கொள்வேன்!!
*************************************
அந்திமாலை சூரியன்...
அடிவானம் தொடும் அலைக்கடல்...
மிதக்கின்ற மேகம்...
மின்னுகின்ற நட்சத்திரம்...
அழகான வானவில்...
அமைதி நிறைந்த வான்வெளி...
இருள் வான் வெண்ணிலா...
இளவேனில் பருவம்...
வளைந்தோடும் வடவைக் கனல்...
விழி நிறைய நீ...
*************************************
இடத்தை சொல்லிவிட்டு ஓடி ஒளிகிறாய்...
எனை தேடி சொல்லி மறைந்து போகிறாய்...
விடையை தந்து விட்டு வினாக்களை ஏவினாய்...
எனை பதில் கூற சொல்லி சிரிக்கிறாய்...
எத்தனை நாள் நான் நடிப்பது உனை தேடுவது போல...
எத்தனை நாள் நான் நடிப்பது பதில் தெரியாதது போல...
தேடுதலும் பதில்களும் நமக்கு தெரிந்தவையே..
நீ சொல்லும் வரை நான் நடிப்பது... அது ஒரு சுகமே...
*************************************
பகல்லெல்லாம் உன்னிடம் பேச நினைக்கிறன்...
கனவெல்லாம் அதை பேசி தீர்க்கிறேன்...
*************************************
நான் தினம் போகும் வழிகளும்... வழி பூத்த பூக்களும்... 
என் விழி பார்க்கும் வானமும்.. அதை தொடரும் சூரியனும்...
என் செவிகேட்கும் இசையும்... இசையோடு நானும்...  
அங்கே கரை நின்ற மரமும்...  மரம்  பார்த்த குளமும்...
என் ஜன்னல் வழி சொர்க்கமும்...அதை படம் பிடிக்கும் கைபேசியும்...

என் வியப்பான காலை பொழுதுகள் ரசனை மிக்கவை...
இவை எனக்கான தருணங்கள்... மிக அழகானவை... 
*************************************
என்னை என்ன செய்கிறாய்
என் இதயத்தை அள்ளி போகிறாய் 
கல்லென்று நான் நினைக்க என்னை மண்ணை போல சரிக்கிறாய்...
என் பெண்மை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு குழந்தையென மாற்றினாய்...
நான் செய்வதெல்லாம் என்னவென்று நானறியாமல் போகிறேன்...
உன் சிந்தனைகள் மட்டுமே... நான் சிலிர்த்து போகிறேன்...
*************************************
தத்தி வரும் மழைத் துளிகள்
மண்ணில் முட்டும் முன்னமே
எட்டி அதை பிடிக்கிறேன்
என் கைகளுக்குள் அணைக்கிறேன்...
உற்று அதை பார்க்கையில்
உந்தன் முகம் தெரியுதே
சுற்றி எங்கும் பூக்களே
உன் புன்னகையை உணர்கிறேன்...
இறகு இன்றி பறக்கிறேன்..
இங்கு மழையில் நானும் நனைகிறேன்!!
*************************************
புத்தகத்தில் ஒளித்த வைத்த மயிலிறகு போல நீ எனக்கு...
அவ்வப்பொழுது எடுத்து உனை காணத் தோணும்..
சத்தமின்றி மறுகணம் மறைத்து வைப்பேன்
மற்றொரு முறை எடுத்து அதை பார்க்க தோணும்...
இப்படியே நினைவலைகள் தாக்கி கொண்டே போக
புத்தகத்தை திறந்தே வைத்து விட்டேன்...
மயிலிறகை என் கண்களுக்குள் ஒளித்து வைத்தேன்!
************************************
நான் கண் மூடும் நேரங்களில் தென்றலாய் மெல்ல வருடுகிறாய்...
நான் எனை மறக்கும் நேரங்களில் இசையாய் இன்பம் சேர்க்கிறாய்...
நான் தடுமாறும் நேரங்களில் தாங்கி எனைப் பிடிக்கிறாய்...
நான் எதிர்பாரா நேரங்களில் இதயங்களை அள்ளி கொடுக்கிறாய்... 
************************************
நீ கசக்கினாலும் உன் கையில் பூவாக வேண்டும்...
உனை நீங்கிய பின்னும் என் வாசம் உன்மீது வேண்டும்!
நீ கண்மூடினாலும் உன் இரவாய் மாற வேண்டும்...
உனை மடி சாய்த்து பல கதை பேச வேண்டும்!
நீ விலகினாலும் உன் மழையாய் பொழிந்திட வேண்டும்...
குடையிருந்தும் என் அன்பில் உனை நனைக்க வேண்டும்!
நீ வெறுத்தாலும் உனை என்றும் ரசித்திட வேண்டும்...

உன் சிறு முறுவல்களில் என் காலைகள் விடிந்திட வேண்டும்!
************************************
ஒரு சில சமயங்களில் ஒரு சில வார்த்தைகள் உன்னை மிகவும் ஞாபகப்படுத்தும்...
அவ்வப்போது நானே சிரித்துக்கொள்வேன்...
பைத்தியம் என்பார்கள் என் தோழர்கள்...
ஹாஹா.. அவர்களுக்கென்ன தெரியும்
நான் சித்தரிக்கும் அந்நொடிப் பொழுதுகள் எனக்கு மட்டுமே அர்த்தமாகும் அழகிய கவிதையென...
************************************
முப்பது வயதை தாண்டியதும் அதுவரை வாழ்ந்ததெல்லாம் முன் ஜென்மம் போலுள்ளது...
இருப்பது ஓரிடமானலும் நெஞ்சம் பின்னோக்கி ஓடி செல்லுது...
உயிர் நட்பெல்லாம் பனி போல் உறைந்துபோனது...
சிரித்த நொடிகளும் வெட்டவெளியிருந்து விளகி போனது...
கண்ட கனவெல்லாம் கானல் நீராய் கலைந்து போனது...
கட்டிய கோட்டையெல்லாம் மேகமாய் கரைந்து போனது...
வரைந்த சித்திரங்களில் வண்ணம் மறைந்து போனது...
நினைந்த கவிதைகள் எல்லாம் காற்றில் பறந்துபோனது...
எனினும் இப்பொழுது வாழ்க்கை என்றும் கசந்து போனதில்லை...
நான் பெற்ற பிள்ளையின் முத்தம் என்னை கிறங்கடிக்க தவறியதில்லை...
கணத்த நெஞ்சம் இனி திரும்ப வழியில்லை...
நினைத்த பாதி நிறைய வாழ்க்கை ஐம்பதை எட்டி செல்கிறது...
*******************************************
நீ காண்பாயென இருள் விளக்கி காத்திருப்பது என் கவிதைகள் மட்டுமல்ல...
உயிர் உருகி விழி மலர்ந்து அதன் பின்னால் மறைந்தபடி இருக்கும் நானும்தான்...
*******************************************
வார்த்தைகளின்றி எழுதிய அழகான கவிதை நாம்...
மழையின்றி முகம் நனைக்கும் வென்பனிக்காற்று நாம்...
தொடாமல் உள்ளம் உருக்கும் சிறு ஸ்பரிசமும் நாம்...
சுடாமல் இதம் தரும் சுகமான வெப்பமும் நாம்...
விழாமல் விதைத்தெழும் மலர்கொடியும் நாம்...
அழாமல் பனித்திடும் ஆனந்த கண்ணீரும் நாம்...
நான் நீயாக கலந்திருக்கும் உயிர் மெய்யாக நாம்...
நீ நான் என்ற பொருள் ஏதுமின்றி நாமாக நாம்... 
*******************************************
அடுத்த முறை கண்ணாடி முன் நிற்கும் போது 
"குயில்" என்றும் "மடி" என்றும் சொல்லி பார்...
உன்னை விட இந்த உலகில் அவ்வார்த்தைகளை... 
இத்தனை அழகாய் சொன்னவர் யாருமில்லை!!
*****************************************************************
குறுஞ்செய்தி
“நீ நலமா?”
“உன் வீடு நலமா?”
“நீ தினம் போகும் ரயிலும் நீ தலை சாய்க்கும் பேருந்தின் கடைசி இருக்கையும் சுகமா??”
“மழை சுகமா அங்கு கடற்கரையில் நீ கால் பதிக்கும் மணல் சுகமா??”
“இரவு நிலவும் வியர்க்கும் வெயிலும் நலமா?”
“உன்னறை பட்டாம்பூச்சிகள் சுகமா?”
“உன் கட்டிலில் தலையனை சுகமா?”
“உன்னை பார்க்க வேண்டும்”
“உன் குரல் கேட்க வேண்டும்”
“உன் சிரிப்பொலியில் மலர்ந்திடும் காலைகளை உணர வேண்டும்”

இவை எல்லாவற்றையும் ஒற்றை வார்த்தையாய் “😊” இதில் அடக்கிவிட்டாள்!!!
*****************************************************************
சலனமில்லா நடு இரவு நேரம்...
கண்களின் ஓரம் துளி ஈரம்...
கடிகார முள் மட்டுமே துடிக்கும் நிசப்தத்தில்
நீ உனக்குள் முனகிய பாடல் என் செவிகளில் இனிதாய் கேட்க...
மூச்சு காற்றை நிறுத்திக்கொண்டு உன் சுவாசம் எங்கென தேடுகிறேன்...
இரவில் உன் முகம் கரைந்து போனது... துடிக்கும் என் இதயம் நின்று போனது...
கைப்பேசி வழியே இன்றெனக்கு 
ஒரு இதயம் மட்டும் அனுப்பிவிடு!!
******************************************************************
மழைத்துளிகளை அள்ளிச் செல்லும் மேகம் போல் என் மனதோடு அன்பினை அள்ளிச் செல்வேன்...
உன் ஒரு மின்னல் பார்வை... உன் சிறு மென்சிரிப்பு...
அது போதுமே..
உள்ள அன்பினை எல்லாம் உன் மேல் பொழிந்திடச் செய்வேன்!!
******************************************************************
நீ பார்க்கும் வரை என் வானவில் வண்ணம் கொள்வதில்லை...
நீ சிரிக்கும் வரை என் உலகில் பூக்கள் மலர்வதில்லை...
நீ கேட்கும் வரை என் பாடல் இசையாய் இனிப்பதில்லை...
நீ படிக்கும் வரை என் கவிதைகள் அர்த்தம் பெறுவதில்லை...
******************************************************************
கடற்கரை மணல் கைகளில் ஒட்டியது போல்
உன் மனதோடு ஒட்டிக்கொண்டேன்...
உதறியதாய் நீ நினைக்கிறாய்...
கை இடுக்கில் கொஞ்சம் மணல் சிக்கியது போல்
உன் கண் பார்வையில் நான் சிக்கித் தவிக்கிறேன்!!
******************************************************************
ஒரு சிறு பறவை தன் ஓட்டை உடைத்து வெளி வரும் தருணம் அழகு...
முதல் காலை முத்தத்தில் ஒரு பூ தன் இதழ் விரிக்கும் நொடி அழகு...
கரு மேகங்கள் கடல் மேல் பெய்யும் மழை பார்க்க அழகு...
மலை உச்சியில் மேகங்கள் நம்மை தொட்டு செல்லும் அந்த உணர்வு அழகு...
என் கவிதைகளுக்காக நீ தினம் காத்திருப்பது மிக அழகு...
அதை படிக்கையில் உன் இதழ் மலர்வது இன்னும் கொள்ளை அழகு...
******************************************************************
என் கண்ணீரை துடைக்க வேண்டாம்
என் சிரிப்பை சிதைக்காதே...
என் கற்பனைகளில் கறைய வேண்டாம்
என் கனவினை கலைக்காதே...
என் துன்பங்களில் துணை வேண்டாம்
என் இன்பங்களை வெறுக்காதே...
என் கைப்பற்றி நடக்க வேண்டாம்
என் கால்களை இடறாதே...
என் உள்ளம் புரிய வேண்டாம்
என் உணர்வுகளை உரைக்காதே...
என் உயிராய் இருக்க வேண்டாம்

என் இதயத்தை உடைக்காதே....
******************************************************************
பச்சை வயலின் முகப்பில் மேகமில்லா வானில் மின்னும் செந்நிற கதிரவன்...
ஓடும் நீரில் கால் நனைக்கையில் அலைந்து தெரியும் மீன்கள்...
கயிற்று கட்டிலில் படுத்தபடி வானில் எண்ணும் நட்சத்திரங்கள்...
நினைத்தால் பறித்து சுவைக்க மாங்கனிகள் கொண்ட மரங்கள்...
தோய்ந்தாலும் தேய்ந்தாலும் எங்கும் கூட்டி செல்லும் மிதிவண்டி...
கடற்கரை அருகே ஓடி பிடித்து விளையாட நண்டுகள்...
எட்டூர் வரை மணக்கும் அத்தை கை கீரை துகையல்...
கை பிடித்து பத்திரமாய் கூட்டி செல்லும் மாமன் மகன்...



எதையெதையோ கேட்கிறோம் தினந்தோறும் கடவுளிடம்...
இதையெல்லாம் கேட்டால் இல்லயென்றா சொல்வான்?



******************************************************************
காய்ந்த பின்னும் பூக்கள் வாசம் இழப்பதில்லை...
தேய்ந்த பின்னும் நிலவு வளர மறப்பதில்லை...
ஓய்ந்த பின்னும் காதல் மறந்து போவதில்லை 
******************************************************************
வாழ்க்கை என்னும் விடுகதைக்கு
விடை தேடி அலைகின்றோம்..
விடை என்று நாம் நினைப்பதை
திருத்த இங்கு எவருமில்லை...
சரியென்றும் தவறென்றும்
எதுவும் இங்கு நிலையில்லை...
உன் தவறுகளெல்லாம் என் நெஞ்சம் மறந்துவிடும்... 
நீ சரியென்பதை மட்டுமே நிஜமென்று நம்பிவிடும்...
******************************************************************
எத்தனை இரவுகள் வந்தாலும் பகல்கள் விடிவதில்லையா...
எத்தனை மழை பொழிந்தாலும் வெயில் தான் வருவதில்லையா...
எத்தனை முறையானாலும் அலை கரைகளை தொடுவதில்லையா...
நீ நான் மட்டுமென்ன விதிவிலக்கா?!!?
******************************************************************
முற்றுப்புள்ளிகள் வாக்கியத்திற்கு மட்டுமே...
வார்த்தைகளுக்கல்ல.
முடிவுகள் வாழ்க்கைக்கு மட்டுமே...
வாழ்வதற்கல்ல.
******************************************************************
இணையத்தள பக்கங்களின் இடுக்குகளில் உன் தடயங்களை தேடி அலைகின்றேன்...
உனை காணாத நேரங்களில் என் இயலாமை எண்ணி உடைகின்றேன்...
பிடிக்கிறதோ இல்லையோ அவ்வப்போது உன் இருப்பிடத்தை உணர்த்திவிடு...
உனை தேடித்திரியும் வலிகளில் இருந்து எனக்கொரு விடுதலை கொடுத்துவிடு...
******************************************************************
கண்கள் இவ்விடம்...
கனவுகள் எல்லாம் உன்னிடம்.
சுவாசம் இவ்விடம்...
உயிர் மூச்சு உன்னிடம்.
நிழல் இவ்விடம்...
நிஜமெல்லாம் உன்னிடம்.
இதயம் இவ்விடம்...
துடிப்பதெல்லாம் உன்னிடம்.
ஊண் உதிரம் இவ்விடம்...
உயிர் உணர்வுகள் உன்னிடம்.
இருப்பிடம் இவ்விடம்...
வாழ்வது என்றும் உன் மனதிடம்.
******************************************************************
எல்லாருக்காகவும் நேசிக்கிறோம்...
சில சமயம் அப்பா அம்மாவின் பாசத்திற்கு...
சில சமயம் குடும்பம் குழந்தைகள் நலனிற்க்கு...
சில சமயம் சமுதாயம் சீர்திருத்தங்களின் உணர்வுக்கு...
சில சமயம் சந்தர்ப்ப சமயங்களின் சூழ்நிலைக்கு...
ஒரு நொடி... ஒரே ஒரு நொடி... 
நமக்காக நேசிப்போம்...
நம்மை நேசிப்போம்... 

அந்த ஒரு நொடி வாழ்க்கை சுயநலமானாலும் சுகமானது... 
******************************************************************
முகம் பார்க்க வேண்டாம்.. உன் கண் பார்க்க வேண்டாம்..
கரம் பிடித்து கை கோர்க்கவும் வேண்டாம்...
சிரிக்க வேண்டாம்... உன் தோள் சாய வேண்டாம்...
என் மடி மீது நீ தூங்கவும் வேண்டாம்...
இமை மூடி ஒரு நொடி நீ என்னை நினைக்கையில், உன் மனதின் ஓர் ஓரத்தில் சிறைக்கொள்வேன்...
பகலெல்லாம் கடந்து நீ துயில் கொள்கையில்,
உன் கனவுலகின் ஆழத்தில் உயிர்க்கொள்வேன்!!!
******************************************************************
என் வாழ்வில் நீயும் வந்தது...
என் இரவுகள் வெள்ளை ஆகி போனது...
என் கனவுகள் வண்ணம் பல கொண்டது...
என் இனிமைகள் எங்கும் இங்கு படர்ந்தது...
என் உலகிலே பூக்கள் எங்கும் மலர்ந்தது...
என் விடியலில் உனது பிம்பம் படர்ந்தது...
என் உயிரிலே உன் நினைவு எங்கும் கலந்தது..

******************************************************************

மழை நீரில் அழகாய் சென்றதென்று 
காகித கப்பலொன்றை
கடல் அலையில் தத்தளிக்க விட்டுவிட்டேன்...
அலையோடு சென்றுவிட்ட கப்பலை
அடையவும் முடியாமல் விளகவும் முடியாமல்
கால் நோக கரையிலேயே காத்திருக்கிறேன்...
இருள் சூழ்ந்தாலும் பனி படர்ந்தாலும்
இனி நான் மட்டும் திரும்பமாட்டேன்... 
காலம் மாறும் ஒரு நாள்... அன்று தொலைந்த என் கப்பலை தேடி கடலிறங்கவும் தயங்க மாட்டேன்!!
******************************************************************
நான் வரைந்த சித்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிரிக்கிறாய்...
இன்னொரு சித்திரம் வரைய சொல்லி திரும்பாமல் நடக்கிறாய்...
சிதைந்து போன சித்திரத்தில் என் உயிர் கரைந்தோடுது...
வெறும் ஊணை மட்டும் வைத்து நான் எதையென்று வரைவது... 
******************************************************************
சலனமில்லா இந்த இரவு நேரம்...
நிலவு வெளிச்சம் மென்மையாய் ஜன்னலோரம்...
என்னிமை மூடும் தருணம் மனதுக்குள் பரிச்சயமான நினைவுகள்... 
என்னிசை கேட்டு நீ தினம் கண்ணுறங்கிய ஞாபகங்கள்...  
உன் கண் மூடினாலும் இதழ் முறுவல் மறையாது... அது நினைவில்லையா??
இன்று எனக்குள் நான் இசைத்துக்கொண்டிருக்கிறேன்.. நீ இன்னும் உறங்கவில்லையா???
******************************************************************
அழகான ஒரு சிற்றருவி...
அதனருகில் வட்ட நிலா...
வெள்ளி கீற்றாய் ஓடும் ஓராரு...
வைரமாய் மின்னும் நட்சத்திரங்கள்...
அற்புதமான இக்காட்சி என் மொட்டை மாடி இரவிலிருந்து... 
தொலை நோக்கு கருவியாம் டெலஸ்கோப்பில் பார்க்கிறேன்... 
அருகில் போலத்தான் இருக்கிறது... ஆனாலும் தூரம் என்றார்கள் பிற நகரத்துவாசிகள்..
******************************************************************
வறண்ட நிலத்தில் மழை தரும் குளிர்... 
நீ இந்நாள் கடந்து பேசும் பேச்சு...
வந்த மழை போகாமல் இருக்க...
நான் எந்த சாமியை வேண்டிக்கொள்ள வேண்டும்??
******************************************************************
நம் பயணம் கொஞ்சம் தூரமே...
உன் வலிகளை நான் சுமந்து கொள்வேன் சுகமாய்... 
நாம் சேரும் வரை என் இன்பங்களை சற்றே ஏந்திக்கொள்வாயா??
******************************************************************
காற்றில் கலந்திருக்கும் பூ வாசம் போல் ... 
மழையில் கலந்திருக்கும் பனித்துளிகள் போல் ... 
எரிமலையில் கலந்திருக்கும் ஒரு சிறு பொறி போல் ...
உன் நினைவலைகள் என்னுள் கலந்த பின் 
இனி நான் என்பதே இங்கில்லை... எல்லாம் நீயாகிறாய்...
******************************************************************
நான் உயிர் வாழ என் அத்தியாவச தேவைகள்...
உண்ண உணவு...
உடுக்க உடை....
இருக்க இருப்பிடம்...
நினைக்க நீ....
******************************************************************
காலணா மிட்டாயும்... கருப்பு வெள்ளை டிவியும்...
காலை நேர காப்பியும்... அம்மா கை சோறும்...
காற்றில் பறக்கும் பட்டமும்... கடற்கரை மணல் கோட்டையும்...
அப்பா என பயமும்... அக்காவுடன் சண்டையும்... காதலித்து தோற்பதும்...
கவலையிலிருந்தும் சிரிப்பதும்...
காலம் மாறி போகையில்.. காசுடன் தஞ்சம் ஆகையில்... 
சுகங்கள் எல்லாம் ஒன்று சேர்த்து சௌகர்யத்தற்காக விற்கப்பட்டன... 
******************************************************************
தூறல் அழகு, நீ நனைந்தால் அந்த மழை மின்னலும் அழகு...
பனி அழகு, நீ இருந்தால் உறையும் குளிரும் அழகு...

நிலவு அழகு, நீ ரசித்ததால் என் இரவுகள் எல்லாம் கொள்ளை அழகு!
******************************************************************
உன்னுடன் ஊடல் பின் காதல்... 
கை சுட்டாலும் வேண்டுமென கேட்கும் அந்த மழை நேரத்து தேநீர் போல... 
குளிர் உறைய செய்தாலும் வேண்டுமென கேட்கும் உன் வெப்பமான அரவணைப்பை போல... 
வலித்தாலும் கசந்தாலும் நம்மில் படரும் அந்த இனிப்பான காதல் போல... 
******************************************************************
சில சமயம் உன் சிரிப்பு என்னை மகிழ செய்கிறது...
என் கண்ணீர் உன்னை கோவம் கொள்ள செய்கிறது...
உன் திகைப்பு என்னை வெட்கம் கொள்ளவும்... என் வெட்கம் உன்னை காதல் கொள்ளவும்...
நம் உணர்வுகள் பரிமாறிக்கொள்ளும் அந்த ஒவ்வொவொரு நாளும் உன்னுள் என்னை நான் தொலைக்கிறேன்... நான்தொலையும் ஒவ்வொரு முறையும் நீ என்னுள் கிடைக்கிறாய்....
******************************************************************
எப்பொழுதும் கட்டி அணைப்பது மட்டுமே காதல் அல்ல...
சில சமயம் விட்டு நடப்பதும் காதல் தான்... 
******************************************************************
எங்கோ கேட்கும் இசையில் உன் குரல் கேட்டு நான் கண் மூடுகிறேன்...
நிஜமா கனவா என்று தெரியவில்லை... உன் கைகளை பற்றி கொள்ள துடிக்கிறேன்...
நிஜமென்றும் கனவென்றும் இனி எதுவும் இல்லை... 
உன் தோல் சாய்ந்து இருக்கும் ஒவ்வொவொரு நொடியும் அழகென என்னை இழக்கிறேன்... 
உயிர் பசியோ நம் உடல் பசியோ... எல்லாம் கலந்த அந்த இன்பமான நொடிக்காக ஒவ்வொவொரு முறையும் காத்து கிடக்கிறேன்...
******************************************************************
உன் இதழ் விரித்து என் இதழ் மேல்  பதிக்கும் அந்த ஒரு முத்தம் போதும்...
பனி படர்ந்து உறையும் குளிரிலும் ஒரு எரிமலையின் அனலை என்னுள் உணர்வேன்!!! 
******************************************************************
பிழை என்று எண்ணி உன் கைகளில் நீ வரைந்த காகிதமாய் கசங்கி போகிறேன்...
எரியாதே என்னை... அந்த காகிதத்தில் என் இதயம் துடித்து கொண்டிருக்கிறது...
******************************************************************
உன் ஒரு சிரிப்பு என் உலகில் ஒரு விடியல்...
உன் ஒரு ஸ்பரிசம் என் வானில் முதல் மழை....
உன் ஒரு பார்வை என் ஜன்னலில் ஆயிரம் நட்சத்திரம்...
உன் ஒரு முத்தம் என் வனத்தில் லட்சம் பட்டாம்பூச்சிகள்...
உன் ஒரு வார்த்தை என் இரவின் மெல்லிய இசை...
உன் ஒரு காதல் என் மொத்த வாழ்க்கையின் அர்த்தம்...
******************************************************************
முதல் முறை எனது கவிதை போட்டியில் நான்  தோற்கிறேன்... இனிமையாய்...
உன் கை வரைந்த ரோஜா இதழ்களுக்கு முன் என் கவிதை ஒரு சொதப்பல் தான்... 
******************************************************************
முட்கள் குத்தும் என்றாலும் ரோஜா அழகு...
இதயம் வலித்தாலும் நம் காதல் அழகு...
வாழ்க்கை கசந்தாலும் நம் உறவு அழகு...
தூரம் இருந்தாலும் நம் நெருக்கம் அழகு...
******************************************************************
கடற்கரையில் அலை அடித்து நம் கால்களை மணல் உள்ளிழுக்கும் போல் 
உன் காதல் அலை என்னை உள்ளிழுத்து செல்கிறது இன்னொரு அழகான உலகிற்கு...
******************************************************************
சிறு விளக்கில் தீபம் ஏற்றினேன்... வாசல் வெளிச்சம் மங்கலாய்
காத்திருந்து சிவந்த விழிகள்... அனலாய் துடிக்கும் இதழ்கள்
உயிர் உறையும் முன் ஒரு முறையேனும் என் இடை அணைத்து போ... 
******************************************************************
காற்றில் கலந்திருக்கும் பூ வாசம் போல் ... 
மழையில் கலந்திருக்கும் பனித்துளிகள் போல் ... 
எரிமலையில் கலந்திருக்கும் ஒரு சிறு பொறி போல் ...
உன் நினைவலைகள் என்னுள் கலந்த பின் 
இனி நான் என்பதே இங்கில்லை... எல்லாம் நீயாகிறாய்...
******************************************************************
என் மடி சாய்ந்து நீ தூங்கும் பொது என் உலகம் நின்று தான் போகிறது...
எங்கோ கேட்கும் பாட்டின் இனிமையும்... எங்கோ தேயும் நிலவின் வெளிச்சமும்...
படபடக்கும் காற்றில் ஆடும் தென்னை மரமும்... சிலிர்த்து உறங்கும் குளத்தருகே வாத்தும்... 
எதுவும் இனிமையாய் இல்லை... ஒரு சிறு முறுவல் கொண்டு நீ தூங்கும் அந்த அழகை கண்டு...
******************************************************************
ஒரு சிறு பறவை தன் ஓட்டை உடைத்து வெளி வரும் தருணம் அழகு...
முதல் காலை முத்தத்தில் ஒரு பூ தன் இதழ் விரிக்கும் நொடி அழகு...
கரு மேகங்கள் கடல் மேல் பெய்யும் மழை பார்க்க அழகு...
மலை உச்சியில் மேகங்கள் நம்மை தொட்டு செல்லும் அந்த உணர்வு அழகு...
நீ என்னை பாட சொல்லி கண் மூடி இதழ் மலர்ந்து தூங்குவது... கொள்ளை அழகு... 
******************************************************************
என்றோ ஒரு நாள் நீ கடற்கரை மணலில் நின்று உன்னவளை பற்றி சித்தரிக்க...
அந்த கடல் சேரும் மறு பக்கம் நான் என்னவனை பற்றி கற்பனையில் ஆழ.. 
உன்னவள் நான் என்னவன் நீ என்ற உண்மை நமக்கு அப்போது விளங்கவில்லை...
எங்கோ உள்ள அவன் நம்மிருவரை கண்டும் காணாதாய் கடந்து சென்றுவிட்டான்...
இப்போது நம் காதல் கண்டு தவித்து கொண்டிருப்பானோ?
******************************************************************
மூன்று முறை சம்மதம் சொல்லவில்லை 
மூன்று முடிச்சுகள் கழுத்தில் கட்டவுமில்லை...

ஒரு சிறு சிமிழில் நீ காதல் சொன்ன அந்த நொடி...

இனி உன் சுக துக்கங்களை இனிமையாய் சுமப்பேன்... 
உன் சிறு தொடுதலில் பூவாய்  மலர்வேன்... 
உன் கண் சிரிப்பில் சிலிர்த்து போவேன்...
உன் மறு பாதியாய் உயிரில் கலப்பேன்... 
*****************************************************************
என் இரவில் உதிக்கும் விடியல் நீ 
என் கனவில் பிறந்த நிஜமும் நீ...
என் விழிகளில் வழியும் கண்ணீரும் நீ..
என் இதழில் மலரும் புன்னகையும் நீ...
என் வலிகளில் விடியும் இன்பம் நீ...
என் இதயத்தை  இயக்கும் துடிப்பும் நீ...
என் உயிரில் இருக்கும் உணர்வும் நீ..
அந்த உணர்வில் இருக்கும் உருவமும் நீ... 
******************************************************************

கடல்மணலில் கைகள்  நனைத்த பின் விரல் இடுக்கில் சிக்கிய மண்ணை போல...
சாரல் மழையில்  நனைந்த பின் முகத்தில் ஒட்டி கொண்ட ஈரம் போல..
என் மனதோடு நீ ஒட்டி கொண்டாய்... 
அந்த இனிமை என்னை விட்டு போகாமல் நேரம்  உறைந்து போக நான் வேண்டிக்கொள்ள...
என் கண்ணோரம் வழியும் கண்ணீர் துளிகள் என் மனதோடு பூத்த உன் காதல் பூவிற்கு நீரூற்றாய்... 
நம் காதல் என்றும் உறையா உயிராய்...
******************************************************************
இரவு நிலவு மிக அழகு... 
ஆனால்... விடிவேனா என்ற பகலும்...மறைவேனா என்ற இரவும் 
வானத்தில் தூரிகை கொண்டு வரையும் கருநீல வண்ணம்...
அங்கே மிளிரும் அந்த நிலவு இன்னும் கொள்ளை  அழகு... என் விடிவெள்ளி நேரத்து நிலவு நீ... 
******************************************************************
கற்பனையான என் வாழ்க்கையை உன் காதல் வந்து எழுப்பியது...
கண் மூடி தூங்க முயற்சிக்கிறேன்... தினம் தோற்று போகிறேன்... 
ஒரு முறை விழித்த பின் வரும் தூக்கம் கனவுகளால் நிறைந்திருக்கும்...
ஒரு முறை உன் கண் பார்த்த காதல் உன்னை மட்டுமே கேட்கும்... 
******************************************************************
சிறு குழந்தை இனிப்பு கேட்டு அழும்போல் நான் உன்னை கேட்டு அழுகிறேன்...
கண்ணில் மட்டும் காட்டி விட்டுஉயரத்தில் தன்னை வைக்கிறார் கடவுள்...
தினம் தூரம் நின்று பார்த்து ஏமாற்றத்தில் திகைக்கிறேன்...
ஒரு நாளேனும் உன் கையில் நான் சேர துடிக்கிறேன்....
******************************************************************
கைபேசி வழியே நீ செய்யும் காதலே இத்தனை அழகாய் இருக்கையில் 
உன்னுடன் கை கோர்த்து நடக்கும் காதல் எத்தனை இனிமையாய் இருக்கும்... 
******************************************************************
இத்தனை தூரத்திலும் என்னை உன் பார்வையால் சிலிர்க்க செய்கிறாய்..
இத்தனை இருளிலும் என் வாழ்வில் கதிராய் நிறைகிறாய்...
என் உடல் பொருள் ஆவி எல்லாவற்றிற்கும் ஒரு அர்த்தமாய் 
என் கரம் பற்றி அணைத்தால் போதும்...
மீண்டும் மீண்டும் பிறப்பேன் உன்னை காதல் கடலில் ஆழ்த்த.. 
******************************************************************
கடற்கரையில் கை கோர்த்து கால் பதித்து நாம் நடக்கையில் 
அந்த கால் சுவடிகளில் கசியும் நம் காதலை கண்டு...
கடல் அலை வந்து அள்ளி செல்லும் அந்த சுவடுகளை...
நம் காதலும்  அவ்வலைகளுடன் அடி வானம் தொட்டு 
வரும் வழியில் விண்மீன்கள் சுமந்து வரும்... 
உன் தோல் சாய்ந்து நான் ரசிக்க... 
******************************************************************
இரவு நேரத்து வெளிச்சம்... நீ என் நிலவு..
பகல் தேடும் வெளிச்சம்.. நீ என் கதிர்...
பூக்கள் தேடும் ஸ்பரிசம்.. நீ என் காற்று... 
பூமி தேடும் ஈரம்... நீ என் மழை.. 
கண்கள் தேடும் வண்ணம்.. நீ என் வானவில்...
என் உயிர் தேடும் உறவு... நீ என் துணை...
******************************************************************
உன்னை கட்டி அணைத்து உன் நெஞ்சில் முத்தமிட தோன்றுது...
உன் கண் பார்த்து என் காதல் சொல்ல தோன்றுது...
நீ பேசும் பேச்சையும்.. உன் மூச்சு காற்றையும் பக்கம் இருந்து கேட்க தோன்றுது...
உன் கரம் பற்றி உன்னோடு கால் நனைய நடக்க தோன்றுது...
உலக நியதிகளை நாம் மாற்ற முடிந்தால்.. இந்த கணம் உன்னோடு இருப்பேன்..
உன் கட்டிலில் நீ உறங்கும் அழகை ரசித்து கொண்டு... 
******************************************************************
நீ உறங்கும் தலையணையாய் நான் மாற வேண்டும்... 
உன் தலை முடி கோதி ஒரு முத்தமிட வேண்டும்... 
என்னுள் உள்ள காதல் கரை புரண்டோடி உன் கனவுலகில் சிறை கொள்ள வேண்டும்... 
நீ விழிக்கும் அந்த நொடி உயிர் கொள்ள வேண்டும்..
******************************************************************
உன் கால்கள் செல்லும் ஒவ்வொரு இடத்திற்கும் நானும் வருவேன் 
எடுத்து செல் என்னை உன் இதய துடிப்பாய்...
எடுத்து செல் என்னை உன் மூச்சு காற்றாய்...
எடுத்து செல் என்னை உன் கண் இமையாய்...
காதலுடன் கை கோர்த்து நடப்பேன் உன்னுடன்...
******************************************************************
உன்னை ஒரு ஜென்மம் காதலிப்பதே இத்தனை சுகமானால் 
உனக்காக ஒவ்வொவொரு ஜென்மமும் நான் பிறக்க வரம் வேண்டும்..
******************************************************************
உலகத்தின் இரு துருவங்களில் நாம்..
நீ இன்று நான் நேற்று ...
நான் இன்று நீ நாளை ...
இந்த இடைவெளியில் உலர்ந்து திரிவது காதல் !!
******************************************************************
நிஜத்திற்கும்  கனவிற்க்கும் இருக்கும் இடைவெளி 
உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி போல் ...
தூரம் இருந்தும் அருகில் இருக்கும் போலொரு  சுகம் 
தொட முடியவில்லை எனினும் ஸ்பரிசம் தரும் சுகம்... 
****************************************************************** 
விழித்துக்கொண்டிருக்கையில் இவ்வுலகில் நான் உன்னவள் ஆக முடியாததால்
என்னவன் நீ துயில் கொண்டிருக்கும் வேலையில்
உன் கரம் பற்றி இழுக்கிறேன்... என்னுடன் எழுந்து வா..
நமக்கான வாழ்வு நம்மை அழைக்கிறது..
******************************************************************
காதல் கொண்ட பின் அது நடக்காது என்று தெரிந்தால் அந்த காதல் வலி மிக்கது ...
நடக்காது என்று தெரிந்தும் காதல் கொண்டால் அந்த காதல் உணர்வுபூர்வமானது ...
எதிர்பார்ப்புகள் இல்லாமல்  வலிகளை  தாண்டி  நம்மில் உயிர்த்திருக்கும்
******************************************************************

Comments