நடுநிசி கவிதைகள் - பாகம் 2

முற்றுப்புள்ளிகள்...
மூன்று முறைக்கு மேல் தொடர்கதைகள்...
******************************************* 
நிலவின் ஒளி கீற்றில்
கதிரவன் எழும் வீச்சில்
கடலலை ஓரத்தில் 
மணல்வெளி தாக்கத்தில்
கிளிஞ்சல்களின் குவியலில் 
பிரித்து வீசிய வலையையும் 
 பாய்மரக் கப்பலும் கொண்டு 
உனை நாடு கடத்த போகிறேன்!!
******************************************* 
உனை தேடி நான்...
எனை தேடி நீ...
இரு 
விழியில் தொலைந்து...
ஒரு வழியில் இணைவோம்...
******************************************* 
எதை தேடுகிறேன் என்று தெரியாமலேயே தேடுகிறேன்...
எங்கு கிடைக்கும் என்று தெரிந்தும் தேடுகிறேன்...
அலையோசை ஒலிசெறிவில் முணுமுணுத்து பேசுகிறேன்...
ஆகாயம் வெளுத்திருந்தும் சிதறலொளி எடுத்து செல்கிறேன்...
கருப்பு காகிதத்தில் நான் மை கொண்டு தீட்டிய 
பிழையான கவிதையாய் கிழிந்து போகிறேன்!!
******************************************* 
இருளிலும் நிழலிலும்
என் இதயத்தின் அடித்தளத்திலும்
மிளிர்வது உனது கண்கள்!
******************************************* 
எத்தனை முறை ஃப்யூஸ் போனாலும்
உனை தேடி வந்தே பல்ப் வாங்குகிறேன்!
******************************************* 
தடங்கள் பிரிவது பயணங்கள் நிறைய
ஆதவன் மறைவது நிலவு ஒளிர
உணர்வுகள் உறைவது வலிகள் பிரிய
உள்ளங்கள் உடைவது எவரோ மகிழ!!
******************************************* 
விடியலை கொஞ்சம் ரசித்துக் கொள்ளவா?!
சற்றே பூக்களை நுகர்ந்து கொள்ளவா?!
ஒரு முறை மழையில் நனைந்து கொள்ளவா?!
ஒரே ஒரு முறை விண்ணில் பறந்து கொள்ளவா?!
பெரிதாக ஒரு முறை சுவாசித்துக் கொள்ளவா?!
பரிதவிக்கும் இதயத்தை துடிக்க சொல்லவா?!
ஏனெனில் நீ பூமிக்கு வந்த பின் நிதர்சனங்கள் எனக்கு வியப்பாகின்றன...
******************************************* 
உனை கேட்கும் ஆயிரம் கேள்விகளில் 
ஒரு கேள்வியாய் தொலைந்து போகிறேன்
******************************************* 
உனை கண்டு சென்ற மின்மினி பூச்சிகள் எல்லாம்
விண்ணடைந்து நட்சத்திரமானது!!
******************************************* 
மணலில் ஒளியும் நண்டு போல்
என் மனதில் வந்து ஒளிந்து கொள்கிறாய்!
கடல் அலையோ கடும் வெட்பமோ 
எனக்குள்ளேயே புதைந்து கொள்கிறாய்!
******************************************* 
கனவில் நான் எழுதிய கதை ஒன்று 
எனை களவாடி செல்லும் நிஜமானது...
நினைவில் நிற்பது நீ ஆதலால் 
எழுதிய விரல்கள் கைதானது!
******************************************* 
ஒவ்வொரு முறை நனைந்தாலும்
புது மழையாய் பெய்கிறாய்...
தினம் தினம் விடிந்தாலும் 
புதியதொரு பொழுதை தருகிறாய்...
நான் உனை புன்னகைக்க கேட்டால் 
எனை புதியதாய் பூக்க செய்கிறாய்...
******************************************* 
உடைந்து போன கண்ணாடி துகள்களில் 
சிதறிய ஓராயிரம் இதயங்களின்
ஒரே ஒரு துடிப்பாய் நீ!!
******************************************* 
உனை நீக்கி உயிர் சுமக்கும் உடலென்பதுமில்லை...
இமை விளக்கி ஒளி காணும் விழியும் இங்குமில்லை...
இனி வார்த்தை என்பதில்லை 
உனை பார்ப்பதென்பது இல்லை 
இங்கு நானென்ற ஒன்று இருந்ததிற்கு சுவடுகளும் எங்கும் இல்லை...
******************************************* 
வரிகள் அல்ல ஒரு வார்த்தை போதும்
அலைகள் அல்ல ஒரு துளி மழை போதும்
விழிகள் அல்ல ஒரு முறை கண்டால் போதும்
விரல்கள் அல்ல அவை எனை குறித்தால் போதும்...
******************************************* 
தூதாக சென்ற காற்றுக்கு
உனை கண்டு வர தெரிந்தது...
நான் சொல்லி அனுப்பிய செய்தியை
எங்கோ பாதியிலேயே தொலைத்தது...
தேடி சுழன்றும் காற்றிற்க்கு பாவம்
என் வார்தைகள் கிடைக்காமல் போனது...
நான் கோபம் கொள்வேன் என்றெண்ணி
உன் மேல் தென்றல் வீசி வந்தது...
******************************************* 
உன் கண்மணி பாவையை தாண்டி ஒரு உலகம் என்பதுண்டா?!
உன் கை விரல் எட்டாத தொலைவில் ஒரு திசையும் அமைவதுண்டா?!
உன் இமைகள் விரிவதை தாண்டி ஒரு
பகலிரவு பிறப்பதுண்டா?!
உன் நினைவு அவைதனை விடுத்தால் ஒரு
இனிமை வேறேதுமுண்டா?!
******************************************* 
கோடைக்கால மழையாய்
தென்றல் தாக்கிய பூவாய்
விழியில் கசிந்த மையாய்
உன் நிழலில் விழுந்த நான்!
******************************************* 
விரல் கொண்டு மை தீட்டி கண்களால் எழுதிய ஓர் இரவில்...
வெள்ளியென மின்னும் புன்சிரிப்பால் பதித்த சில நட்சத்திரங்களை
பறித்து கொண்டு பகலிற்க்குள் ஓடி மறைந்து சிரித்துக்கொண்டிருக்கிறாய்...
ஒரு போர்வையை போல் கலைத்து உன் பகலையெல்லாம் அழகிய இரவாக்குவேன்!!!
******************************************* 
துளிர்க்கையில் தண்ணீர் ஊற்றி பின் மலர்கையில் மறைந்து...
உவமையாய் இருந்த பின் உண்மையில் தொலைந்து...
வெயிலிலே நிழலான பின் பனியிலே பதுங்கி...
நினைவிலே கலந்த பின் நிழலிலே கரைந்து...
உணர்விலே உறைந்த பின் எங்கு போய் ஒளிவாய் ?
******************************************* 
பூக்கள் மலரும் விடி காலையில்
நிலவு மறையும் பொழுதினில்
நீ வந்து போகும் தருணங்களில்
என் இதயம் துடிக்க மறுக்கிறது...
******************************************* 
வானில் எங்கோ மின்னும் ஆயிரம் நட்சத்திரங்களில் ஒன்றல்ல...
என் ஞாயிற்றுத்தொகுதியில் ஒளிரும்
ஒரே ஒரு ஆதவனாய் நீ!!
******************************************* 
வார்த்தை இல்லை... வடிவம் இல்லை...
நான் தேடி வரும் தருணத்தில் உன் தடயமில்லை...
தேடவில்லை... எதிர்பார்க்கவில்லை...
என் கண்ணிரண்டில் மட்டுமிங்கு ஜீவனில்லை...
******************************************* 
நினைவில்லாமலில்லை நேரம் தான் இல்லை என்ற வழி உனது
உடலில்லாமலில்லை உயிர் தான் இல்லை என்ற வலி எனது!!
******************************************* 
சட்டென வரும் கோடை மழையா நீ?!
தெப்பலாய் எனை நனைத்து போகிறாய்..
சில்லென நானும் குளிர்வதற்க்கு முன்பே
சுட்டெரிக்கும் வெயிலில் எனை விட்டு செல்கிறாய்!
******************************************* 
விட்டு சென்றதாய் நீ எண்ணிக் கொள்கிறாய்
உன் சட்டை பையில் ஒட்டிக் கொண்டிருக்கிறேன்...
தள்ளி இருப்பதாய் நீ ஏங்கிப் போகிறாய்
உனை கள்ளத்தனமாய் திருடிக்கொண்டு வருவேன்!
******************************************* 
ஜன்னல் கொஞ்சம் திறந்து வை..
காற்றாக வருகிறேன்..
குளிர் காற்று அடித்தால்
போர்வையாக மாறுவேன்!!
******************************************* 
இரவிலும் இமை மூடாமல் நடக்க கற்கிறேன்..
இருளிலும் உன் பிம்பத்தை கண்டு வியக்கிறேன்...
வார்த்தைகளே இல்லாமல் வாக்கியங்கள் சேர்க்கிறேன்...
உன் வாசமே இன்றியும் நீ இருத்தலை உணர்கிறேன்...
நிஜமாக நீ இங்கு இல்லாமல் போனாலும் 
நிழலிலே உன்னுடன் பேசி கழிக்கிறேன்...
*******************************************
கரந்துறைக்கோளாய் எங்கோ காணாமல் தெரிகிறாய்...
கண் விழிக்காமல் கண்டாலும் எனக்கு மட்டும் விளங்குகிறாய்...
வடவிக்கனலில் தொலைந்து நீ வானவில்லில் கிடைக்கிறாய்...
என்னில் வண்ணங்களை பொழிந்து மழையென நனைக்கிறாய்....
*******************************************
எங்கெங்கோ தொலைந்து எதிலெதிலோ திரிந்து 
நான் வந்தடையும் என் பயண முடிவின் இறுதியில் நீ!!
*******************************************
விழி இரண்டில் உனை தேக்கி வைக்கிறேன்
அடுத்த மழை வரை காய்வதில்லை...
புயல் மழை எனில் முன்னதாக சொல்லிவிடு
அணை வெள்ளம் இனி தாங்குவதில்லை!!
*******************************************
வெயில் பின் வரும் நிழலா நீ
இருள் வானில் அழகிய நிலவா...
குளிர் பின் வெட்ப இதமா நீ
குடைக்குள் தெறிக்கும் மழையா...
விழியாடும் இரவின் கனவா நீ
களவாடிய தூக்க களைப்பா...
எனை தொடர்ந்து வரும் நிழலா நீ
எனை இயக்கும் உயிர் துடிப்பா!!
*******************************************
இறகின் இதமாய் இரவின் நிழலாய்
இயல்பாய் துடித்திடும் இதயத்தின் இசையாய்
மெல்லிய காற்றாய் பனியாய் குளிராய்
கண்கள் காணா உயிரின் மூச்சாய்
வானவில் சுமக்கும் வண்ணமாய் கனவாய்
என் வானெங்கும் சிந்திடும் மெல்லிய சாறலாய்
விரல் இடுக்கில் சிக்கிய வருடலாய் படர்கிறாய்
என் இதயமெங்கும் பட்டாம்பூச்சி போல் பறக்கிறாய் சிலிர்க்கிறாய்!
*******************************************
தூறலில் புயலின் தாக்கம் தருகிறாய்
தென்றலில் சூறாவளி காற்றென வீசுகிறாய்
மெல்லிய இறகாய் என் மேல் விழுந்து
வேரொடு என்னை தரையில் சாய்க்கிறாய்
பாறை மேல் படிந்த பனியென மாறி
மண்ணாக என்னை மணலோடு சேர்க்கிறாய்!!
*******************************************
ஜன்னல் தாண்டி கதவை தாண்டி
தெருக்கோடி இருந்து ஊர் தாண்டி
வீடு தாண்டி நாடு தாண்டி
ஆறு மலை கடல் தாண்டி
சமுத்திர தாண்டி கண்டங்கள் தாண்டி
மண்ணையும் விண்ணையும் உடன் தாண்டி
புவி மண்டலமும் வளி மண்டலமும்
பால்வெளி அண்டம் கூட தாண்டிடுவேன்
உன் விழி தாண்டி ஒரு அடி தாண்ட
கால்கள் தடுமாற உன் கரத்தில் விழுந்திடுவேன்!!
*******************************************
அஸ்தமனம் ஆனாலும் சூரியன் விட்டு போகும் சிவந்த வானம்...
மழை நின்று போனாலும் மண் சுமக்கும் வாசம்...
முழு நிலவின்றி போனாலும் பிறை நிலவின் மங்கிய வெண்ணிறம்...
நீ அருகில் இல்லாமல் போனாலும் எனக்குள் கேட்கும் உன் குரல்....
*******************************************
மழை பூத்த ஜன்னலோரம்...
இதழ் விரித்து சிரிக்கும் சிறு பூக்கள்...
தோகை விரித்தாடும் வானவில்...
வான் மிதக்கும் மேகங்கள்...
இருள் விளக்கி ஒளிந்தாடும் மாலை வெயில்...
மின்மினி பூச்சிகள் சுமந்து செல்லும் விளக்குத் தோரணம்...
நான் கண்மூடி திறக்கும் நொடிகளுக்கு மத்தியில் 
மின்னல் போல் வந்து போகும் உன் முகம்...
*******************************************
நீ அருகில் இருப்பின்...
உலகமெல்லாம் குவியமின்றி போவதேனோ!!
*******************************************
பிறை நிலவு காண்கிறேன்..
உன் முழு முகம் தெரிய செய்கிறாய்...
நேர் கோடு வரைகிறேன்
நீ உனையாய் உரு கொள்கிறாய்!!
*******************************************
எத்தனை பக்கங்கள் திருப்பினாலும்
சலிக்காத புத்தகம் நீ...
எத்தனை முறை கேட்டாலும்
திகட்டாத இசையும் நீ...
எத்தனை முறை நுகர்ந்தாலும்
அலுக்காத பூ வாசம் நீ...
தினம் தினம் உதித்தாலும்
எனை மயக்கிடும் அழகான விடியலும் நீ!!
*******************************************
அழகாய் ததும்பி வரும் அலை நுரையில்
என் கவிதைகளின் வார்த்தைகளை அனுப்புகிறேன்...
உன் கால் நனைத்த சிலிரப்பில் தனை மறந்து
அவ்வார்த்தைகள் அர்த்தமின்றி கரைந்து போயின!!
*******************************************
அஸ்தமனம் ஆனாலும் சூரியன் விட்டு போகும் சிவந்த வானம்...
மழை நின்று போனாலும் மண் சுமக்கும் வாசம்...
முழு நிலவின்றி போனாலும் பிறை நிலவின் மங்கிய வெண்ணிறம்...
நீ அருகில் இல்லாமல் போனாலும் எனக்குள் கேட்கும் உன் குரல்...
*******************************************
கை பிடிக்கநீட்டினேன்... கை கோர்த்து கொள்கிறாய்
கண் விழித்த நேரத்தில்... இமைக்காமல் பார்க்கிறாய்...
​எனை கடந்து போகையில்... தென்றல் வீசி செல்கிறாய்...
நான் கேட்க நினைத்ததெல்லாம் கேட்காமலே தருகிறாய்...
*******************************************
காலம் கடந்து செல்கிறது...
கால்கள் தடுமாறுகிறது...
நரை விழுந்து தோய்ந்தாலும் 
இதயம் இளந்தையாய் இருக்கிறது... 
*******************************************
கடைக்காரன் பார்க்காதபோது காய்கறியை எடுத்து கூடைக்குள் போட்ட அப்பாவை 
பாவமாய் பார்த்தான் காலையில் சட்டை பையிலிருந்து 
பத்து ரூபாய் எடுத்ததற்க்காக அறை வாங்கிய பொடி பையன்!
***************************
"இன்னைக்கு சோறு சுத்தமா நல்ல இல்லை" என தட்டை தூர தள்ளி விட்டு எழுந்துநடந்தான் பிள்ளை...
இன்றைக்காவது பட்டினி கிடக்காமல் சாப்பிடட்டும் அம்மா என்ற நினைப்பில்!
***************************
கண் மூடும் முன்னே தோன்றும் காட்சிகள் அவை கனவுகள் இல்லை...
கண் மூடிய பிறகும் வழிந்தோடிடும் கண்ணீர்
அங்கு தூக்கம் இருப்பதில்லை!!
***************************
இமை காணும் வழி என்று
இறுதி வரை போகலாம்
ஏய் விளக்கு எரிவது கண்டு
பகலென்று நினைத்திடலாம்..
இதயம் காட்டும் வழி முடிவில்
இலக்கின் நோக்கம் அடையலாம்
இருள் விலகி வரும் பகலில்
பனி மழையில் நனைந்திடலாம்!!
***************************
ரயில் கிளம்பி சிறிது தூரம் சென்ற பின்
ஜன்னல் வழியே அவள் எட்டி பார்த்தாள்...
தூரம் மிக அதிகமானாலும்...
திருப்பங்கள் பற்பல வந்தாலும்...
நிலவின் நிழலில் அவன் வீடு இருந்தது
தெள்ளத்தெளிவாய் அவள் கண்களுக்கு தெரிந்தது!
***************************
பரதேசி
கனவென்று நினைத்திருந்தான்...
விழியெங்கும் ஈரம்...
இதயத்தில் படபடப்பு...
மூச்சுக்காற்றில் வெப்பம்...
இருளில் தடவி கைப்பேசி கிடைக்க 
வீட்டின் எண்ணிற்கு அழைப்பு விடுக்க...
ஒரு பொழுது ஒரு யுகமாய் கடந்தது 
அம்மா குரல் கேட்கவும் கொஞ்சம் உயிர் திரும்பியது...
இன்றைய பொழுது கழிந்தது...
நாளைய பயங்களை சுமந்தபடியே! 
***************************
மழை கேட்டிருந்தேன்...
மேகத்தால் தேன் ஊற்றி சென்றாய்...
நிழல் கேட்டிருந்தேன்...
மரக்கிளை கொண்டு பூ பொழிந்து சென்றாய்...
கை கோர்த்து வழி நடத்தக் கேட்டேன்
எனை தரை வீழாமல் அள்ளி சென்றாய்...
உன் விழியில் எனை காண கேட்டேன்...
உன் இதயத்தில் நிறைந்த என்னை அறிமுகம் செய்கிறாய்... 
*******************************************
கை கோர்த்து செல்லும் நிஜமென நீ...
இருளிலும் உனை தொடரும் நிழலென நான்...
*******************************************
உன் விழி இரண்டில் விழுகிறேன்...
விரல் நுனியில் மலர்கிறேன்...
கனலென தினம் எரிகிறேன்
கார்முகிலாய் நெஞ்சம் கனக்கிறேன்...
மழையென பொழிந்திட என் மனதெல்லாம் நனைந்திட 
உயிர் கரைந்திட விரைந்தெனை காண வா...
*******************************************
சிறகிருந்து பறக்க யாம் கொண்ட கனவானது 
சிறையாக கூண்டிலே வெதும்பும் பல  இரவானது
இரவலாய் ஒரு வாழ்க்கை இரையாக நானிருக்க 
இழந்திருக்க ஏதுமில்லை அற்பானதை தேடுகிறேன்...
*******************************************
மழை நனைந்த பின் குடை வேண்டியதில்லை...
விழி திறந்தபின் கனவுகளில் பொய்யில்லை...
அறிந்த பதில்களுக்கு கேள்விகள் தேவையில்லை...
புரிந்த மாந்தர்க்கு விளக்கங்கள் பொருட்டில்லை...
*******************************************
உலகம் உருண்டை தான் ஒத்துக்கொள்கிறேன்...
நான் எங்கு சுற்றி திரிந்தாலும் இறுதியில் உன்னிடமே வந்தடைகிறேன்!!
*******************************************
பூக்கள் பூத்திருக்கும் வழியெல்லாம் என் புன்னகை சிந்த பார்க்கிறேன்
மழை பொழிய அந்த நனைதலில் என் மனதை இயற்க்கையில் இழக்கறேன்...
விடிந்ததும் ஓடும் காலை நேரங்களின் இல்லாமையில் இளைப்பாறுகிறேன்..
எதையோ தேடி தினம் ஓயும் வாழ்க்கையில் ஓடாமல் நிற்க பார்க்கிறேன்!!
*******************************************
வேலை முடிந்து வீடு திரும்புகையில் 
பொய் பொலிவில் மினுங்கும் வெளிச்ச கதிர்கள் 
முகத்தில் அறைந்து சிரிக்கிறது...
அழகாய் காமிக்க ஆயிரம் வஸ்துகள்...
அலங்காரம் செய்யும் நூறு கோலங்கள்...
கழட்டி எரிய துடிக்கும் கைகளால் 
முகத்தில் தண்ணீர் அள்ளி வீசுகிறாள்...
கண்ணருகே ஓடும் சுருக்கங்கள் கூட 
வடிவாய் முகத்தில் உலவ...
நிஜங்கள் நிதர்சனங்கள் எல்லாமே 
அழகாய் அவளாய் பிரதிபலிக்க...
இன்னொரு முகமூடி மாட்டுகிறாள் 
தன்  வீட்டின் அழைப்பொலி அழுத்துகிறாள்...
*******************************************
யோசிக்காமல் எதையோ பகிர...
சிந்திக்காமல் சிரித்து பேச...
கிளிஞ்சல்கள் மீது கிறுக்கல்கள் வரைந்து 
கரை சேர அனுப்புகிறேன்...
*******************************************
உனக்குள் எழுந்து உனக்காக விதைகிறேன் 
உலகில் பிறந்து உன்னில் மடிகிறேன்
விழியில் விடியல்கள் தினம் தினம் கண்ட பின்
இரவை இனி நான் விருப்பின்றி  வெறுக்கிறேன்
*******************************************
இறுக்கமான இடைவெளி...
நெருக்கமான தூரம்...
உருக்கமான காயம்...
பிணக்கமான நேசம்..
விருப்பமான வெறுப்பு...
விளக்கமில்லா உறவு...
*******************************************
கண் இமைக்கும் நொடியிலே
காட்சியாக வருகிறாய்..
கண் விழித்து தேடுகிறேன்
காற்றினோடு கறைகிறாய்!!
*******************************************
கனவாதலால் கருப்பு வெள்ளை அழகா...
கருப்பு வெள்ளையாதலால் கனவழகா...
*******************************************
எங்கோ வீசும் சாறலில் நான் கொஞ்சம் நனைகிறேன்..
எங்கோ அடிக்கும் அலைகளில் என் கால்களை நனைக்கிறேன்...
நாட்கள் கடந்து திங்கள் தாண்டி வருடங்கள் கழிந்து வரும்
என்றோ அப்பொழுதிற்கு இன்று தேதி தாள் கிழிக்கிறேன்!!
*******************************************
தனியே நின்று சிரிக்கிறேன்...
பைத்தியமாய் திரிகிறேன்...
காற்றில் கைகள் ஆட்டியே
கோலம் நிறைய வரைகிறேன்...
என்னை நானும் மறக்கிறேன் ...
இரவில் தூக்கம் இழக்கிறேன்...
பொழுதெல்லாம் உன்னை நினைக்கிறேன்...
இரவின் கனவில் தவிக்கிறேன்...
கோடிங் டெவெலப்மென்ட் என்று காதல் கொண்டு 
இன்று கோமாளி போல் நிற்கிறேன்...
*******************************************
பொழிந்திடாத மழையாய் மேகத்தில் மறைய வேண்டும்...
வீசிடாத காற்றாய் பூக்களுக்குள் ஒளிந்திட வேண்டும்...
பட்டாம்பூச்சியாகாமல் கூட்டுக்குள் இருந்திட வேண்டும்...
அலையாய் ஆகாமல் ஆழ்கடலில் மூழ்கிட வேண்டும்...
தேடியும் கிடைக்காமல் காணாமல் போக வேண்டும்...

தெரிந்தும் தெரியாததாய் இருளில் இணைந்திட வேண்டும்!! 
*******************************************

கடந்து போன பாதை எல்லாம் 
கண்களில் நின்ற காட்சிகள் பல 
மனதில் நின்ற ஓரிரு தருணம் 
அதில் என் வழி மாறி போனது இன்று... 
விழி மூடி நடக்க தயக்கமில்லை...
மழை மேகம் தொடர வேண்டும்...
*******************************************

பூக்களை விட்டுவிட்டு இலைகளை பறிக்கிறேன்...
இதழ்களை விட்டுவிட்டு இமைகளில் தடுமாறுகிறேன்...
விரல்களை பிடித்துக்கொண்டு நடக்காமல் நிற்கிறேன்...
இடி மின்னலை விட்டுவிட்டு ஒரு புன்னகையில் சரிகிறேன்!!
*******************************************
பூக்கள் எல்லாம் வாடுதென
மேகம் அனுப்பிய தூதனாய்
மழைத்துளி வின்னிறங்கி வர
ஏக்கம் துக்கம் காதல் கொண்டு
வழிந்த கண்ணீரில் துளிர்த்தது
பூக்கள் மேல் அழகிய பனித்துளிகள்...
*******************************************
நிழல் இரண்டும் கலந்த பின்
நிஜம் என்பது தூரமில்லை
*******************************************

ஒளி விளக்கு என்றும் கதிராவதில்லை

விடிந்ததும் அது உயிர்ப்பதில்லை

பொய்கள் என்றும் நிஜமாவதில்லை

பொருத்தாலும் அது மறப்பதில்லை! 

*******************************************

வானவில் எல்லாம் வரைந்து விட்டு

வண்ணம் மட்டும் கலவாடியதென்ன?!

மின்னல் மழையென பொழிந்த பின்

பாலைவனமாய் விட்டதென்ன?!

சிலந்தி வலை ஒன்றை கட்டி விட்டு

என்னை சிக்க வைத்து சென்றதென்ன?!

கை பற்றியே அழைத்து வந்து

இன்று வழியிலே விட்டு போவதென்ன?!

*******************************************

மற்றுமொரு இணைபிரபஞ்சத்தில்

சீதை தானே தன்னை விடுவித்து கொண்டாள்

அவள் கதையில் இராமன் தேவைப்படவில்லை!

In another parallel universe

Sita saved her own self

She didn’t need a Rama in her story!

*******************************************

Comments