சட்டென திரும்பியதும் தெரிந்தது அவள் முகமா? ஒரு கணம் என் பிரபஞ்சம் உறைந்து போனது. என் மகன் என் கை பிடித்து இழுத்து போகும் திசையில் என் கால்கள் நடக்க மறுத்தன.
“டாடீ… ஐஸ்கிரீம்…” அவனின் பிஞ்சு குரல் எங்கோ தூரத்தில் ஒலித்தது.
என் கண்களும் காதுகளும் இதயமும் திரும்பிய திசையில் அவள்… அது அவள் தான்… என்றுமே எனக்கு பிடித்த மென் நீல நிற உடையில் அவளும் அவளை போலவே இருந்த சிறு பிள்ளையை கையில் ஏந்தி நின்றிருந்தாள். ஓரிரு நிமிடங்கள் என் உலகம் அவளை நோக்கி உருண்டு சென்றது… என்னுடைய அவள்… என் நடுநிசி நேரங்களை நிரப்பியவள்… என் போலவே நினைப்பவள்… என் விருப்பங்களை பகிர்ந்தவள். என்னை அறியாமல் என் இதழ் மெல்ல விரிந்தது. அவளை கூப்பிட மனம் எத்தனித்தது… அவள் பெயரை சொல்ல நா சுழல ஆரம்பித்தது.
“ஷாள் வீ கோ?” என் மனைவி பக்கம் வந்து நின்றாள். பிள்ளையின் கையிலிருந்து ஐஸ்கிரீமை தட்டிவிட்டது போல் உணர்ந்தேன். “ம்ம்” தவிற எனக்கு வேறொன்றும் வாயிலிருந்து வெளியேறவில்லை. என் மனைவியின் கையிலிருந்த பைகளை வாங்கி திரும்பிய மறு கணம் அவள் அங்கு இல்லை. நழுவ விட்ட நொடிகளை எண்ணி என்ன செய்வது? அப்படியே இருந்தாலும் நான் அங்கு தானே இருந்தேன்… மிக அருகில் தானே நின்றிருந்தேன்… என்னை அவள் பார்க்க கூட இல்லை. என்னை மறந்துவிட்டாளா? என் முகம் நினைவில்லையா? புரிந்தாலும் ஒப்புக்கொள்ளாத மனது.
~~~~~~~~~~~~~~~~
அன்று இரவு அவள் வலைபதிவில் வெளியிடப்படாத ஒரு புது படைப்பு…
“பதிவிடாத கடிதம்”
“நீங்கள் தான்… நான் பார்த்தது உங்களைத்தான். என் அருகில் தொட்டு விடும் தூரத்தில் இருந்தது நீங்கள் தான். என்னை பார்ப்பது தெரிந்தும் கல்லை போல நின்றிருந்தேன்; என் கையில் பிள்ளையை சற்று இருக்கி அணைத்தப்படி. பேச ஆயிரம் வார்த்தைகள் ததும்பியும் அணை தாண்டிட கூடாதென என்னை நானே கட்டுப்படுத்தி கொண்டேன். ஒரு வார்த்தை கடந்தாலும் அணை உடையும் என்று எனக்கு தெரியும். நீங்கள் பார்த்திடாத தருணத்தில் விலகி சென்றேன். என் மேல் கோபமா?
உங்களின் மகனை பார்த்தேன்… சாயலில் உங்களை கொண்டவன். என்னிடம் உங்கள் சிறு வயது புகைப்படம் இன்னுமே உள்ளது. அதில் இருக்கும் உங்களை போலவே அவனும்.
வெவ்வேறு திசையில் நாம். இருவரின் உலகம் வேறாய் இருப்பினும் நீங்களும் என்னை போலத்தான் பிள்ளை வளர்ப்பீர்கள் என்று எனக்கு தெரியும்.
எத்தனையோ பகிர்ந்து கொள்ள மனம் ஏங்கி கொண்டிருக்கிறது. ஆனாலும் அவ்வப்பொழுது நினைத்து கொள்வேன் - இனி நாம் பேச நேர்ந்தால் பிள்ளைகளை பற்றியும், பணிகளை பற்றியுமே பகிர்ந்து கொள்வோம்; ஆனால் அதை பகிர்ந்து கொள்ள தான் ஆயிரம் பேர் இருக்கிறார்களே… நாம் பகிற நினைத்த வாழ்க்கை தான் கடந்து வெகு தூரம் சென்று விட்டதே. இனி பேச என்ன இருக்கிறது? எனக்கானவனாய் என்னுடையவனாய் இருந்த காலம் மாறி தான் போனது. இனி எதார்த்த வாழ்க்கை மட்டுமே நம் பாதை. அதை நான் ஒரு போதும் தாண்டிட முடியாது. நான் என் பாதையில் சுமந்து செல்வது என் வாழ்க்கை மட்டுமே அல்ல உங்களுடையதும் தான். ஒரு போதும் சிதறிட மாட்டேன். ஒரு போதும் சிதைக்க மாட்டேன்.
என்றோ ஒரு நாள், எப்பொழுதாவது தேடி வருவேன்… என்னிடம் இனி யாருக்கும் கொடுக்க ஒன்றுமே இல்லாத போது எனக்கானதை தேடி வருவேன். அன்றும் நீங்கள் தேடுவது எனைத்தான் என்று தெரிந்தால் என் பயணம் அங்கு முடியும். தேடியே தொலைந்த ஒன்றாய் நாம் சந்தித்தாலும் தொலைந்ததில் மிஞ்சிய சில நொடி பொழுது மட்டும் எனக்கு போதும். சம்மதமா?”

மகிழ்ச்சியும், அமைதியும், அன்பும், உங்கள் வாழ்வை என்றும் அலங்கரிக்கட்டும்.
ReplyDeleteவாழ்த்துக்கள் 🎉
மகிழ்ச்சியும், அமைதியும், அன்பும், உங்கள் வாழ்வை என்றும் அலங்கரிக்கட்டும்.
ReplyDeleteவாழ்த்துக்கள்