உயிர் மொழி

எனது தாய் மொழி தமிழ் அல்ல. இதை பல பேர் நம்பும்படி இல்லையென சொல்வார்கள். முக்கியமாக தமிழ் நண்பர்கள் நம்ப மறுப்பார்கள். நான் எழுதும் பதிவுகளும் கவிதைகளும் தமிழில் தான் அதிகம். அதனால் என்னவோ நான் தமிழ் என்றே அனைவரும் நினைக்கிறார்கள். 

என் தாய் மொழி தமிழ் இல்லையென்றாலும் எனக்கு தமிழின் மேல் ஒரு அலாதி பற்று. பிறர் தமிழை இழிவு படுத்த நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். நான் எந்த ஊர் என யார் கேட்டாலும் தமிழ் நாடு என்று தான் சொல்லுவேன். 

என் புகு வீட்டு குடும்பத்தினர் அனைவரும் நான் தமிழ் இல்லையென்பதை உணர்த்த முயலுவர். ஆனால் நமது மௌனமான சிந்தனைகள், எண்ணங்கள் அனைத்தும் தமிழில் இருக்கையில் அது உயிரிலே ஊறி போன ஒன்றாகி விடுகிறதல்லவா? பின் ஏன் அது என் தாய் மொழிக்கு ஈடாகாது? 

எனக்கு பல மொழி நண்பர்கள் உண்டு… ஆனால் தற்சமயம் நான் உறவாடும் நண்பர்கள் பலரும் தமிழ் பேசுவதில்லை. அது எனக்கு மிகவும் வருத்தமான ஒரு விடயம். என் விருப்பங்களை பகிர்ந்து கொள்ளவோ, என்னுடன் நகைச்சுவையாக தமிழில் பேசி சிரிக்கவோ நண்பர்கள் இல்லை. ஒருவரின் கருத்து வேறுபாடுகளை விவாதிக்கவும் வெளி உலக நிகழ்வுகளை அலசவும் மொழி புரிதல் அவசியம். இதை என் வாழ்க்கையில் ஒரு பெரிய ஏமாற்றமாகவே நினைக்கிறேன். மொழி என்பது உறவிர்க்கு அவசியமில்லை என்று யாரும் வாதாடலாம் ஆனால் நான் தடுமாறி பேசும் பிற மொழியில் அர்த்தங்கள் மாறி என் சிந்தனைகள் புரியாமலே போகின்றன. எனது விருப்பு வெறுப்புகள் வேறுபாடின்றி சிதைகின்றன. எண்ணங்களின் அழுத்தம் காணாமல் போகின்றன. சில சமயங்களில் அது தவறான புரிதலில் முடுந்துவிடுவதும் உண்டு. நமது உள்ளங்களில் இருப்பதை நமது சிந்தனையின் மொழியிலேயே பகிர்ந்து கொள்ளும் போது மனம் லேசாகி விடுகிறது. இறுகிய மனது கூட தானாக இலகி விடுகிறது. அது அன்றாட வாழ்க்கைக்கு எத்தனை முக்கியமென அனுபவத்தில் அறிந்து கொண்டேன். ஒரு விதத்தில் இது சுயநலமாகத் தோன்றலாம். ஆனால் சமமான கொடுத்தல் வாங்குதல் இல்லாமல் உறவுகள் நீடிப்பதில்லை. அந்தக் கொடுத்தல் வாங்குதல் என்பதில் மொழிப் பிணைப்பு இருக்கும்போது, உறவு இன்னும் வலுவாகிறது.


இருந்த சில தமிழ் உறவுகளும் இன்று எனக்கில்லாமல் போய்விட்டன. இப்போதெல்லாம் தமிழில் பேசுவதற்கே சற்று திணறுகிறேன். வார்த்தைகள் மறந்து விடுகின்றன. தமிழ் படங்கள்கூட அதிகம் பார்ப்பதில்லை. தமிழ் பக்கங்களையும் அதிகம் படிப்பதில்லை. ஆனால் எப்போதாவது சில படைப்புகளைப் படிக்க நேர்ந்தால், அதில் மனம் இணைந்து போகிறது.

இதைப் படிக்கும் நீங்கள் படைப்புகளை உருவாக்குபவராக இருந்தால், தொடர்ந்து பகிருங்கள்.

தமிழ் என் தாய்மொழி இல்லை என்றாலும், நான் இணையும் ஒரு பாதுகாப்பான வலையமண்டலம் (comfort zone) அது. ஒரு மொழி பிறப்பால் நமக்குச் சொந்தமாகலாம். ஆனால் சில மொழிகள் மட்டும் நம்மை தேர்ந்தெடுத்த உறவாக மாறுகின்றன. எனக்குத் தமிழ் அப்படிப்பட்ட ஒரு உறவு. அதனாலோ என்னவோ, தமிழை என் உயிர்மொழியாகக் கருதுகிறேன்.

Comments