சில பாடல்கள் நம் மனநிலையை அப்படியே பிரதிபலிப்பது போல் தோன்றும். நாம் நினைப்பதையும் ஏங்குவதையும் அவை நமக்குப் பதிலாகச் சொல்வது போல இருக்கும். அதனால்தான் பாடலாசிரியர்கள் கொண்டாடப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். ஒருவரின் மனம் ஒவ்வொரு உணர்ச்சியிலும் எப்படி இயங்கும் என்று அவர்களுக்கு எப்படித் தெரியும்? அவர்கள் எத்தனை விதமான உணர்வுகளைக் கடந்து வந்திருப்பார்கள்? இதனுடன் பொருத்தமான இசையும் கலந்துவிட்டால், அது ஒரு அரிய சங்கமமாக மாறிவிடுகிறது - made for each other என்பது போல.
இன்று நான் கேட்டு ரசித்த பாடல் ஒன்றின் வரிகள் அலைபாயுதே திரைப்படத்தின் “எவனோ ஒருவன்” பாடலில் இருந்து:
“கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால்
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்”
எவ்வளவு நிதர்சனமான வரிகள்! இசை என்பது பலருக்கு உயிரூட்டும் மருந்து. “இசை மட்டும் இல்லாமல் போனால் நான் என்றோ உடைந்திருப்பேன்” என்ற உணர்வு எத்தனை பேருக்குப் பொருந்துமோ தெரியாது; ஆனால் எனக்கோ அது முழுமையாகப் பொருந்துகிறது.
அதேபோல் டூயட் திரைப்படத்தின் “அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி” பாடலில்:

“என்னவோ என் நெஞ்சிலே
இசை வந்து துளைத்தது
இசை வந்த பாதை வழி
தமிழ் மெல்ல நுழைந்தது
இசை வந்த திசை பார்த்து
மனம் குழைந்தேன்
தமிழ் வந்த திசை பார்த்து
உயிர் கசிந்தேன்”
இசை மனதை வருடும் என்றால், இசையோடு இணையும் தமிழ் இதயத்தை தொட்டுச் செல்கிறது.
எனக்கு மெல்லிசை மிகவும் பிடிக்கும். நான் ஓடுதளத்தில் நடக்கும் (ஆமாம் நடக்கும் போதுதான்) சமயங்களில், குத்துப்பாடல்களால் ஆற்றல் பெறுவதைவிட, மெல்லிசையிலேயே கரைந்து போவது அதிகம். என்னிடம் பழைய பாடல்கள் முதல் புதிய பாடல்கள் வரை பல பிளேலிஸ்ட்கள் உள்ளன.
சில பாடல்கள், அவற்றின் அர்த்தம் புரியத் தொடங்கும் வயதுக்கு முன்பே நமக்குப் பிடித்துவிடுகின்றன. எல்லோருக்கும் பிடித்த “மன்றம் வந்த தென்றல்”, “நிலாவே வா”, “ராசாத்தி உன்ன” போன்ற பாடல்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும். “ஒரு காதல் தேவதை”, “நீயொரு காதல் சங்கீதம்” இவையெல்லாம் மனதை வருடும் பாடல்கள். அதேபோல் “ஏன் பெண்ணென்று பிறந்தாய்”, “இருவது கோடி நிலவுகள்”, “நீ காற்று நான் மரம்”, “சொல்லாமலே யார் பார்த்தது” என்ற காலகட்டத்தின் பாடல்களும் பிடிக்கும்.
ஆனால் இவை மட்டுமல்லாமல் நான் ரசித்த பாடல்கள் இன்னும் ஏராளம்.
இன்றும் என் மகள் உறங்கும் போது சில பாடல்களை நான் பாடுவதுண்டு. அவளும் இப்போது எல்லாம் என்னுடன் சேர்ந்து முணுமுணுக்கிறாள். “காதல் ரோஜாவே”, “சின்ன தாயவள்”, “எனை காணவில்லையே நேற்றோடு” அவளுக்கு பிடித்த பாடல்கள். “கண்மணி அன்போடு காதலன்” பாடலைப் பாடினால், அப்படியே தோலில் சாய்ந்து உறங்கிவிடுவாள். அதோடு இந்த பாடல்களையும் அவ்வப்போது பாடுவேன்:
“இதயம்” படத்திலிருந்து “பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா” பாடலின் இந்த வரிகள்:
“யாப்போடு சேராதோ
பாட்டு தமிழ் பாட்டு
தோப்போடு சேராதோ
காற்று பனிக் காற்று”
யாப்பிலக்கணம் என்பது ஒரு கவிதைக்குத் தேவையான கட்டமைப்பு. அது பாடலுடன் சேரும்போது அதன் வடிவம் முழுமை பெறுகிறது.
ஆனால் சில நேரங்களில் கோட்பாடுகளை உடைத்தால்தான் புதிதான கவிதைகள் பிறக்கின்றன என்பதையும் ஒரு பாடல் நினைவூட்டுகிறது. அன்பே சிவம் திரைப்படத்தின் “மௌனமே பார்வையாய்” பாடல் வரிகள்:
“இலக்கணம் உடைத்ததும் கவிதை வரும்
இரவினை துடைத்ததும் கனவு வரும்
ஸ்வரங்களைத் திறந்ததும் இசை மலரும்
உணர்விலே கரைந்ததும் கலை வளரும்
மொழி தோன்றாத காலத்தில் நுழைந்தால் என்ன
விழி ஜாடைகள் பேசியே நடந்தால் என்ன
ஒரு மெல்லினத்தை வல்லினமும் கைசேர
தொல்காப்பியத்தை தோழி உந்தன் கண்ணாலே பேசு”
வல்லினம் என்பது கடினமான ஒலிப்பைக் கொண்ட எழுத்துக்கள்; மெல்லினம் என்பது மென்மையான ஒலிப்பைக் கொண்ட எழுத்துக்கள். அவற்றை ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான அன்பின் உருவகமாக இங்கு பயன்படுத்தியிருப்பது என்னை எப்போதும் வியக்க செய்கிறது. அப்படி இணையும் காதலில் காப்பியங்கள் பிறக்கின்றன. இரண்டு மனங்கள் ஒன்றாக கலந்துவிட்டால், அங்கே வார்த்தைகள் அவசியமில்லை. பேசாமல் இருந்தாலும், பார்க்காமல் போனாலும், இரண்டு இதயங்களும் இசையிலும் தமிழிலும் இணைந்தே இருக்கும்.
அதிலும் ஒரு தமிழ் பாடலில் “கண்ணம்மா” என்று குறிப்பிட பட்டிருந்தால் அது என்னை மிகவும் கவர்கிறது. பாரதியின் ரசிகையாலா என்று தெரியவில்லை ஆனால் எந்த மொழியிலும் “கண்ணம்மா” என்ற சொல்லிற்க்கு இணையான ஒரு சொல் கிடையாதெனவே நினைக்கிறேன்.
தொடும் நேரம் தொலைவாகுதே
கண்ணம்மா… கண்ணம்மா”
இதையெல்லாம் எழுதிவிட்டு நான் வண்டி எடுத்து போகும்போது ஒலிக்கும் பாடல் “உசுற நரம்புல” அதில் என்னை மிகவும் தாக்கிய வரி:
உன்னக்காட்டும் தேடுனேன்”
இப்போது வரும் பாடல்கள் பெரிதாக மனதில் நிற்பதில்லை. Netflix அல்லது Prime-ல் படம் வந்த பிறகுதான், அப்படி ஒரு திரைப்படம் வெளியானதே எனக்குத் தெரியவரும். “புஜ்ஜிமா பட்டுமா” போன்ற பாடல்கள் சில நாட்கள் கேட்க நன்றாக இருக்கும்; ஆனால் மனம் மீண்டும் பழைய பாதையைத்தான் தேடிச் செல்கிறது.
இங்கே நான் குறிப்பிட்டது சில பாடல்களையும் சில வரிகளையும் மட்டுமே. மனதைத் தொட்ட ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்னும் சொல்லப்படாமல் இருக்கின்றன. எல்லாவற்றையும் எழுத நேரம் போதாது.

ஆனால் அவற்றில் சிலவற்றையாவது இதை படிக்கும் நீங்களும் நானும் ஒரே உணர்வோடு நேசித்திருப்போம் என்பதில் எனக்கு ஐயமில்லை. அதுவே நம்மை இணைத்துவிடும் மந்திரம்.
Comments
Post a Comment
What do you think? Please share your views...