இட்லி சுட மாவு இல்லை

இன்று காலை எழுந்ததும் முதலில் நினைவில் வந்தது - “இட்லி சுட மாவு இல்லை.”


முழுநேர வேலை செய்யும், இரண்டு பள்ளி செல்லும் குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தோடு அமெரிக்க தேசத்தில் தற்காலிகமாக வாழும் ஒரு சராசரி பெண் நான். வீட்டு வேலைக்கு பணிப்பெண் வைக்கும் அளவுக்கு இங்கு வசதியில்லை. சமையலிலிருந்து, வீட்டைச் சுத்தம் செய்வது, சலவை இயந்திரம் காயவைத்துத் தரும் துணிகளை மடித்து வைப்பது, திடீரென வரும் விருந்தாளிகளுக்குச் சமைப்பது வரை எல்லாவற்றையும் நாமே செய்துகொள்ள வேண்டும்.


“அட, இதெல்லாம்தான் பத்தில் எட்டு ரீல்ஸாவது போடும் அன்னிய தேசம் வாழும் தாய்மார்களிடமிருந்து எங்களுக்குத் தெரியுமே!” என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. இருந்தாலும், இட்லி சுட மாவை நீங்கள் கொண்டு வந்து கொடுக்கப் போவதில்லை. அதனால் இதைப் படியுங்கள்.


ஏதோ நாம்தான் ஐந்து ஏக்கர் நிலம், நான்கு வீடுகள் வாடகைக்கு என்று இருக்கவில்லை. நம் பிள்ளைகளாவது கொஞ்சம் வசதியாக வாழட்டும் என்ற ஆசையில்தான் நாடு கடந்து வந்தோம்.


இப்போதெல்லாம் வெளிநாட்டில் இருப்பது பெரிய விஷயமே இல்லை. இங்கு வந்து சிக்கிக்கொண்டு, “வாழ்க்கையில் என்னதான் பண்ணிக்கொண்டிருக்கிறோம்?” என்ற நிலையை அடைந்தவர்கள் ஏராளம்.


என்றாவது ஒரு நாள், ஒரு காப்பியை எனக்கென்று யாராவது போட்டுத் தர மாட்டார்களா என்று தோன்றும். இந்த ஊரின் பால் கூட திகட்டுகிறது. அதில் போடும் காப்பியும் குடிக்க நல்லாயிருப்பதில்லை. போட்ட பத்து விநாடிகளில் சூடு குறைந்து, கழுநீரைப் போல ஆகிவிடுகிறது. அதனால் டீ போட ஆரம்பித்தேன். இப்போது அந்த டீயில்கூட எனக்கு தேங்காய் எண்ணெய் வாசனை வர ஆரம்பித்துவிட்டது. எங்கள் ஊரில் இருந்திருந்தால், காலை காப்பி குடிக்க வேண்டும் என்பதற்காகவே பக்கத்தில் இருக்கும் அம்மா வீட்டுக்குப் போயிருப்பேன்.


எனக்கு கூட்டுக் குடும்பத்தில் பெரிதாக உடன்பாடு இல்லை. அதெல்லாம் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொண்டவர்களுக்கானது. ஆனால், எனக்குத் தனிக் குடும்பத்திலும் உடன்பாடு இல்லை. உறவுகள் தெருவுக்கு இரண்டாவது இருந்தால்தான் அழகு. இதை இங்கிருந்து சொல்வதால் உங்களுக்குக் என் மேல் கோபம் வரலாம். தனியே, யாருமின்றி வாழ்க்கை நடத்தும் என் மாதிரி ஆட்களுக்கு, அடிக்கடி சொல்லாமல் வரும் சித்தப்பாவும், புரளி பேசவே வரும் அத்தைமார்களும் எவ்வளவோ பரவாயில்லை.


“அட, இதையெல்லாம் விட்டுவிட்டு வர வேண்டியதுதானே?” என்றும் நீங்கள் சொல்லலாம். ஆனால் அது காலம் கடந்த ஒன்று. மரம் முதிர்ந்த பிறகு, அதை வேரோடு பிடுங்கி இன்னொரு இடத்தில் நட்டுவிட முடியாது.


ஒரு நாள் காலை எழுந்து “இட்லி சுட மாவு இல்லை” என்று தெரிந்தால்தான், இன்னும் எவ்வளவு தூரம் வீட்டைவிட்டு வந்திருக்கிறோம் என்று புரிகிறது. பணம் சம்பாதிப்பது வாழ்க்கையை வசதியாக்கும். ஆனால் தெரு மூலையில் ஒரு அம்மாவையோ அக்காவையோ கொடுக்காது. உங்களுக்கு அப்படி உறவிருந்தால் அதை கொண்டாடுங்கள். என்னை போல இட்லி மாவு இல்லையென்று சீரியோஸ் சாப்பிடும் தேவை இருக்காது. 

Comments