இது மிகச் சிறிய பதிவு தான். ஆனால் பல நாட்களாக என் சிந்தனையில் தொடர்ந்து எழுந்து, எழுதத் தூண்டிய ஒரு விஷயம்.
சிறு வயதில் என் அப்பா, அவர் நண்பர்களையும், அவருடன் வேலை செய்பவர்களையும் பற்றி பேசும்போது, “அவன்”, “அந்த பையன்” என்று குறிப்பிடுவார். நான் அவரை கிண்டல் செய்து சிரிப்பேன்.
“அப்பா, அவருக்கும் உங்க வயது தானே இருக்கும்… அவர் எப்படி பையனாக முடியும்?” என்று கேட்பேன்.
இன்று அதே காலகட்டத்தின் வயதை நான் அடைந்திருக்கும் போது, என் தோழிகளையும் நண்பர்களையும் நானும் “அந்த பொண்ணு”, “அவள்” என்று தான் குறிப்பிடுகிறேன். என் மகள் இதைப் பற்றி பெரிதாக கேள்வி கேட்பதில்லை. (இந்தக் காலத்தில் நாம் பேசுவதை பிள்ளைகள் கவனித்துக் கேட்கிறார்களா என்ன?!) ஆனால் இதைப் பற்றி நான் யோசிக்கும்போது, ஒரு விஷயம் எனக்குப் புரிந்தது.
என் வயதில் இருக்கும் தோழிகளும், என்னுடன் பள்ளியில் படித்தவர்களும், எனக்குள் இன்னும் அவர்களின் இளமைப் பருவ தோற்றத்திலேயே இருக்கிறார்கள். அவர்களுடன் நான் பழகிய அந்தக் காலத்திலேயே அவர்களின் உருவம் என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. வாட்ஸ்அப்பிலோ, சமூக வலைதளங்களிலோ அவர்களுக்கு செய்தி அனுப்பும்போதுகூட, என் மனக்கண்ணில் தோன்றுவது இப்போது இருக்கும் அவர்கள் அல்ல; என்னுடன் பள்ளியில் ஓடியாடி, சிரித்துப் பேசிய அந்த இளமை முகம்தான்.
அப்போது தான் ஒரு விஷயம் எனக்கு உறைத்தது.
நம் குழந்தைப் பருவம், அதாவது சுமார் 5 முதல் 13 வயது வரையிலான காலம், பல சமயங்களில் நம் நினைவுகளில் தெளிவாகத் தங்குவதில்லை. ஆனால் இளமை மற்றும் வாலிபப் பருவம், சுமார் 13 முதல் 35 வயது வரையிலான காலம், நம் மனதில் ஆழமான தடங்களைப் பதித்து விடுகிறது (ஆமாம்… 35 வாலிபம் தான்! பி.கு. வை படிக்கவும்).
அந்த வயதில் தான் நம் அடையாளம் உருவாகிறது. முதல் ஆழமான நட்புகள், பள்ளி மற்றும் கல்லூரி அனுபவங்கள், நாம் விரும்பிய பாடல்கள், பார்த்த திரைப்படங்கள், படித்த புத்தகங்கள், பகிர்ந்த சிரிப்புகள், சந்தித்த மனிதர்கள் என்று பல விஷயங்கள் நம் மனதில் அழியாத நினைவுகளாகப் பதிந்து விடுகின்றன. எல்லாமே நம்முள் ஒரு சிறிய காலப்பெட்டகமாக பாதுகாக்கப்படுகின்றன. அவை எளிதில் அழிவதில்லை. Frozen memories.
சுமார் 36-37 வயதிற்குப் பிறகு வாழ்க்கை வேறு ஒரு வேகத்தை எடுத்து விடுகிறது. வேலை, பொறுப்புகள், பணம், எதிர்காலம் என்று ஓடிக்கொண்டிருக்கும்போது, புதிய மனிதர்களை சந்திக்கிறோம்; புதிய உறவுகளும் உருவாகின்றன. ஆனால் அந்த உறவுகளை மனதில் அமர்ந்து ரசிக்கவும், ஒவ்வொரு தருணத்தையும் ஆழமாகச் சேமித்து வைக்கவும் நேரம் குறைந்து விடுகிறது. எண்ணங்களும் எதையும் நீண்ட நேரம் நிலையாக நிற்க விடுவதில்லை. அதனால் தான் அந்த வயதில் உருவாகும் நினைவுகள், இளமைப் பருவ நினைவுகளைப் போல மனதில் அவ்வளவு பசுமையாகத் தங்குவதில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.
40 வயதைத் தாண்டியவர்கள், இப்போது வந்த ஒரு பாடலின் முழு வரிகளை நினைவில் இருந்து பாட முடியாமல் இருக்கலாம். ஆனால் 20 வருடங்களுக்கு முன்பு கேட்ட ஒரு பாடல், நம்மை அறியாமலேயே அதன் முழு வரிகளும் நினைவில் வந்து விடும். அதனால் தான் பழைய நினைவுகள் மீண்டும் நம்மை வந்து தொடும் அந்த உணர்வை nostalgia என்கிறார்கள். அந்த நாட்களை நினைத்தாலே, நம்முள் எங்கோ மறைந்து கிடந்த அந்த இளமை உணர்வு மீண்டும் சிறிது நேரம் விழித்துக் கொள்கிறது.
எனக்கு அந்தக் காலகட்டத்தில் அறிமுகமான ஒவ்வொருவரும் இன்னும் என் மனதில் அன்றைய வயதிலேயே இருக்கிறீர்கள். காலம் உங்கள் தலைமுடியில் சில வெள்ளி இழைகளைச் சேர்த்திருக்கலாம். வாழ்க்கை உங்கள் முகத்தில் சில அனுபவக் கோடுகளை வரைந்திருக்கலாம். ஆனால் என் நினைவுகளில் நீங்கள் இன்னும் அதே பழைய முகங்கள்தான். என்றென்றும் மாறாமல், அறவே முதுமை அடையாமல், என்னுடன் பயணித்துக் கொண்டிருப்பது உங்கள் younger version தான்.
என் அப்பா ஏன் அவர்களை “அந்தப் பையன்” என்று குறிப்பிட்டார் என்பதன் முழு அர்த்தம், இன்று தான் எனக்கு விளங்கியது.
பின் குறிப்பு:
விஞ்ஞானபூர்வமாகப் பார்த்தால், 20 முதல் 39 வயது வரை Young Adulthood - வாலிபம் - என்ற பருவமாகவே கருதப்படுகிறது. இப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் 30 வயதைக் கடந்தாலே ஏதோ வாழ்க்கை முடிந்து விட்டது போல கவலைகளையும், வாழ்க்கைத் தத்துவங்களையும் பகிர்வதைப் பார்க்கிறேன். உண்மையில், அந்த வயது முதுமையின் தொடக்கம் அல்ல. வாழ்க்கையை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ளத் தொடங்கும் அழகான ஒரு பருவம். பிறரை மாற்ற முயலாமல் பிறருக்கு ஏற்றார் போல் நம்மை மாற்றி அமைத்துக் கொள்ளும் பருவத்தின் தொடக்கம்.

Comments
Post a Comment
What do you think? Please share your views...